தமிழக மக்களின் உரிமை, நலன், வளர்ச்சி ஆகியவற்றிற்காக எப்போதும் உறுதியான குரலாக இருந்து வருகிறார் முதல்வர்: செல்வப்பெருந்தகை!
சென்னை: தமிழக மக்களின் உரிமை, நலன், வளர்ச்சி ஆகியவற்றிற்காக எப்போதும் உறுதியான குரலாக இருந்து வருகிறார் முதல்வர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்று எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், எனது தனிப்பட்ட சார்பாகவும், மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சமூக நீதி, சமத்துவம், அன்பு, மனிதநேயம் ஆகிய தத்துவங்களை வழிகாட்டியாகக் கொண்டு, தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கோட்பாடுகளை மக்கள் வாழ்வில் செயலாக்கி வரும் அரிய தலைமைத்துவம் கொண்டவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
கடந்த ஆண்டுகளில் கட்சியின் ஒற்றுமையையும் வலிமையையும் வளர்த்ததோடு மட்டுமல்லாது, தமிழக அரசியலில் மக்கள் நம்பிக்கையை பலமடங்கு உயர்த்தியுள்ளார். தமிழக மக்களின் உரிமை, நலன், வளர்ச்சி ஆகியவற்றிற்காக எப்போதும் உறுதியான குரலாக இருந்து வருகிறார். இந்நாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வெற்றிகரமாக எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.