Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் குற்றவாளிக்கு முன்மாதிரியான தண்டனை வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் விவகாரத்தில், குற்றவாளிக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சி தேசிய துணை தலைவர் முகமது ஷபி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் உச்ச நீதிமன்ற விசாரணையின்போது செருப்பு வீசிய இழிவான தாக்குதல் செயல் கடும் கண்டனத்திற்குரியது. இந்த கீழ்த்தரமான செயல் ஒரு தனிப்பட்ட வெளிப்பாடு மட்டுமல்ல, மாறாக, நமது நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தவும், நமது ஜனநாயகத்தின் மதச்சார்பற்ற தன்மையை அழிக்கவும் வலதுசாரி சக்திகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகும்.

இந்த தாக்குதல், இந்திய அரசியலமைப்பின் மூலக்கல்லான சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகும். பாதுகாப்பு இருந்தபோதிலும், நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பது, வலதுசாரி சக்திகள் நீதித்துறையை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயல்வதை வெளிப்படுத்துகிறது. ஆகவே, இதற்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எஸ்டிபிஐ கட்சி கோருகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட சதித்திட்டத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும், குற்றவாளிக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த பாசிசப் போக்குக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் நீதியின் பாதுகாவலராக உள்ள நமது நீதித்துறையை நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.