Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்: புதிய ஆதாரங்களை வெளியிட்டு ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

புதுடெல்லி: வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜ வாக்குகளை திருடியதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை ஆதாரத்துடன் அவர் வெளியிட்டார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து பேரணி நடத்திய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி விரைவில் வாக்கு திருட்டு குறித்த புதிய ஹைட்ரஜன் குண்டை வீசும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் டெல்லியில் நேற்று காலை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராகுல்காந்தி கூறியதாவது: வாக்கு திருட்டில் ஈடுபடுவோரையும், இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களையும் தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். கர்நாடக சட்டப்பேரவை தொகுதியின் தரவுகளில் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆதரவாளர்களின் வாக்குகள் முறையாக நீக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையம் இதனை நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்கு மோசடி செய்பவர்களை பாதுகாப்பதை நிறுத்திவிட்டு வாக்காளர் நீக்கம் தொடர்பான விசாரணையில் கர்நாடக சிஐடியால் கேட்கப்பட்ட தகவல்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அது அரசியலமைப்பு சட்டத்தின் படுகொலைக்கு உடந்தையாக இருப்பது உறுதியாகத் தெரியும்.

இப்போது கூறப்பட்டுள்ளவை ஹைட்ரஜன் குண்டுகள் இல்லை. அவை விரைவில் வரும். நான் அடித்தளத்தை உருவாக்கி வருகிறேன். இது 10-15 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. இந்தியாவின் ஜனநாயகம் கடத்தப்பட்டுள்ளது. இந்திய மக்களால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பற்ற முடியும். ராகுல்காந்தியால் உண்மையை காட்டுவதற்கு முடியும். மக்கள் தங்கள் ஜனநாயகமும், அரசியலமைப்பும் திருடப்பட்டதை உணரும் நாளில் வேலை முடிந்துவிடும். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் இருந்து 6,018 வாக்காளர்களின் பெயரை நீக்க முயற்சிக்கப்பட்டது. தானியங்கி மென்பொருளை பயன்படுத்தி மகாராஷ்டிராவின் ராஜூரா தொகுதியில் மோசடியான முறையில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

ஒரே அமைப்பு இதனை செய்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா, உத்தரப்பிரதேசத்திலும் இதுபோன்று நடக்கிறது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எங்கள் கோரிக்கை என்னவென்றால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன் வேலையை செய்ய வேண்டும். கர்நாடக சிஐடிக்கு நீங்கள் சாட்சியமளிக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களை தலைமை தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறது. யாரோ ஒருவர் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதற்கு திட்டமிட்டு குறிவைத்து வருகிறார்.

நான் எதிர்க்கட்சி தலைவர். 100 சதவீத ஆதாரங்கள் இல்லாத எதையும் நான் கூற மாட்டேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவர். நான் என் அரசியலமைப்பை நேசிக்கிறேன். நான் ஜனநாயக செயல்முறையை விரும்புகிறேன். அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். கர்நாடக மாநிலம் அலந்த் தொகுதியில் 6018 வாக்குகளை ஒருவர் நீக்குவதற்கு முயன்றார். ஆனால் தற்செயலாக சிக்கிக்கொண்டார். வாக்குச்சாவடி நிலை அதிகாரி ஒருவர் தனது சொந்த மாமாவின் வாக்கு கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தபோதுதான் இந்த மோசடி தற்செயலாக அம்பலமானது.

வாக்கு நீக்கம் குறித்து விசாரணை நடந்து வருகின்றது. 18 மாதங்களில் கர்நாடக சிஐடி அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு 18 கடிதங்களை எழுதி இருக்கிறார்கள். இதில், இணைய ஐபி முகவரி மற்றும் செல்போன் எண், ஒடிபி தடயங்கள் போன்றவற்றை கர்நாடக சிஐடி போலீஸ் கேட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகளை எங்கு நடத்தப்படுகின்றது என்பதை இவை காண்பிக்கக்கூடும் என்பதால் தேர்தல் ஆணையம் இதனை வழங்கவில்லை. வாக்கு திருடர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கிறார். இதனை யார் செய்கிறார்கள் என்பது தேர்தல் ஆணையத்துக்கு தெரியும்.

வாக்குத்திருட்டு பற்றிய ஆராய்ச்சிக்கு இரண்டு- மூன்று மாதங்கள் ஆகும். இந்த ஆய்வை நாங்கள் முடித்ததும் ஒவ்வொரு மாநில தேர்தல்கள் மற்றும் மக்களவை தேர்தல் எவ்வாறு வாக்குகள் திருடப்படுகின்றன என்பதில் உங்கள் மனதில் எந்த சந்தேகமும் இருக்காது. உண்மையை வெளிப்படுத்துவதும், அதை நாட்டு மக்களுக்கு காண்பிப்பதும் எனது வேலையாகும். தேர்தல் ஆணையத்திற்குள் இருந்து தான் காங்கிரஸ் கட்சி தகவல்களையும், உதவியையும் பெறுகிறது.

இளைஞர்கள் வாக்குத்திருட்டு செய்யப்படுகின்றது என்பதை அறியும்போது அவர்களின் பலமும் அதில் சேரும். இதற்கு மூலக்காரணம் யார் என்பதை மக்கள் முன் வைப்பேன். எனது ஹைட்ரஜன் குண்டு அனைத்தையும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெளிப்படுத்தும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

* கர்நாடகாவில் 6,018 நீக்கம்: மகாராஷ்டிராவில் 6,850 சேர்ப்பு

ராகுல் காந்தி கூறுகையில், கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்குகளைஆன்ைலனில் நீக்க முயற்சித்த அதே கும்பல், மகாராஷ்டிராவின் ராஜூரா தொகுதியில் மோசடியாக 6,850 வாக்காளர்களை சேர்த்துள்ளனர்.

* டெல்லியில் இருந்து கொண்டே தமிழகத்தில் வாக்கு திருட்டு

ராகுல் காந்தி கூறுகையில், ‘‘டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் அழிக்கப்படுகிறது. அதேபோல் பல மாநிலங்களை சேர்ந்த நபர்கள் வேண்டுமென்றே கர்நாடக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள்‘‘ என்றும் குற்றஞ்சாட்டினார்.

* பாதிக்கப்பட்டவரை மேடைக்கு அழைத்த ராகுல்

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராகுல் காந்தி, கர்நாடக அலந்த் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு முயற்சிக்கப்பட்டவர்களில் ஒரு வாக்காளரையும், பெயர் நீக்கப்பட்ட வாக்காளர் ஒருவரையும் மேடைக்கு அழைத்தார். இருவரிடம் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் தொடர்பாக ஏதாவது தகவல் வந்ததா என்று கேட்டார். அவர்கள் இருவரும் அதனை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று மறுத்தனர். சாப்ட்வேரை பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார்.

* ‘சாக்குப்போக்கு வேண்டாம், ஆதாரத்தை வெளியிடுங்கள்’

ராகுல்காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தனது எக்ஸ் தள பதிவில், அலந்த் வேட்பாளர் மோசடியை அம்பலப்படுத்திய பின், உள்ளூர் தேர்தல் ஆணைய அதிகாரி எப்ஐஆர் பதிவு செய்தார். ஆனால் சிபிஐ விசாரணையானது தலைமை தேர்தல் ஆணையத்தால் தடுக்கப்பட்டது. கர்நாடக சிஐடி 18 மாதங்களில் அனைத்து குற்றவியல் ஆதாரங்களையும் கேட்டு 18 கடிதங்களை எழுதி உள்ளது. இந்த வாக்கு திருட்டு பிடிபடாமல் 6018 வாக்குகள் நீக்கப்பட்டு இருந்தால் காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்திருக்கலாம்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சாக்குப்போக்குகளை கூறுவதை நிறுத்துங்கள். ஆதாரங்களை கர்நாடக சிஐடிக்கு இப்போதே வெளியிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு பகிர்ந்து கொண்டுள்ளார். தேர்தல் ஆணையம் 18 மாதங்களாக காவல்துறைக்கு தரவை வெளியிட மறுப்பதன் மூலமாக விசாரணையை தடுப்பது ஏன்? வாக்கு மோசடி செய்பவர்கள் பாதுகாக்கப்படுவதற்காக தேர்தல் ஆணையம் விசாரணையை தடுப்பதற்கு இது தெளிவான சான்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

* 14 நிமிடத்தில் 12 வாக்காளர்கள் நீக்கம்

கர்நாடக மாநிலம் அலந்த் தொகுதியில் 14 நிமிடத்தில் 12 வாக்காளர்களின் பெயரை நீக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. இதை பற்றி ராகுல் காந்தி கூறுகையில், அலந்த் தொகுதியில் சூரியகாந்த் என்பவர் பெயரில் பயனர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அந்த பதிவை பயன்படுத்தி 14 நிமிடத்தில் 12 வாக்காளர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்க ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இது தனி ஒரு மனிதனால் முடியாது. இதற்காக ஒரு மென்பொருளை தயாரித்து ஒரே நேரத்தில் பலரது பெயர்களை நீக்க விண்ணப்பித்துள்ளனர் என்றார். பின்னர், சூரியகாந்த்தை நிருபர்களுக்கு ராகுல் அறிமுகம் செய்து வைத்தார். சூரியகாந்த் பேசுகையில் ,‘‘என் பெயரை எனக்கு தெரியாமல் பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது’’ என்றார்.

* தேர்தல் ஆணையம் மறுப்பு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குமோசடி செய்பவர்களை பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரிடம் கேட்கும் வாய்ப்பை வழங்காமல் வாக்கை நீக்க முடியாது. ராகுல்காந்தி தவறாக கருதியது போல் எந்தவொரு வாக்கையும் எந்த பொதுமக்களும் ஆன்லைனில் நீக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.கர்நாடகாவின் அலந்த் தொகுதியில் 2018ம் ஆண்டு சுபாத் குட்டேதரும்(பாஜ) 2023ம் ஆண்டில் பிஆர் பாட்டிலும்(காங்கிரஸ்) வெற்றி பெற்றனர். அலந்த் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மூலமாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.