கலைஞரின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: கலைஞரின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025க்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகின்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 பரிசளிப்பு விழாவில் உங்களையெல்லாம் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் நம்பர் 1 டத்தை அடையவேண்டும் என்றுதான், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது விளையாட்டுத் துறைக்கென்று ஒரு தனி அமைச்சகத்தை முதன் முதலாக அமைத்தார். கலைஞர் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான அரசு, விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இடத்தை அடைந்து கொண்டிருக்கின்றது. அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தான், இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரும் விளையாட்டுப் புரட்சியை, ஒரு மாபெரும் இயக்கமாகவே மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர், இதற்காக 84 கோடி ரூபாயை ஒதுக்கி கொடுத்தார்கள். குறிப்பாக, பரிசுத்தொகையாக 37 கோடி ரூபாயை நம்முடைய முதலமைச்சர் ஒதுக்கி கொடுத்தார்கள். அதற்கு விளையாட்டு வீரர்களின் சார்பாக, துறையின் சார்பாக, முதலமைச்சருக்கு, எங்களுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 2023-ஆம் ஆண்டு, இதே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றார்கள். ஆனால், இன்றைக்கு 2025 ஆம் ஆண்டு சுமார் 16 லட்சம் இளைஞர்கள் நம்முடைய முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதிலிருந்து இந்தப் போட்டிகளுக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும், நீங்கள் புரிந்து கொள்ளலாம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்ற நோக்கமே. தமிழ்நாடு முழுவதும் வெளியில் தெரியாமல் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களின் திறமையை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே லட்சியம். தமிழ்நாட்டில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புகின்ற ஒரு launching pad தான், நம்முடைய முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025. 2 இந்த மேடையில் உங்கள் முன்பு முக்கியமான வீரர்கள் உட்காந்திருக்கிறார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்த பெனடிக்சன் ரோகித் இன்றைக்கு நீச்சல் போட்டியில் சர்வதேச அளவில் வெற்றியை தொடர்ந்து குவித்துக் கொண்டு வருகிறார்.
இப்போதுகூட ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை (Men's 100-meter butterfly) நீச்சல் பிரிவில்பெனடிக்சன் ரோகித் 52.5 வினாடிகளில் நீந்தி இன்றைக்கு தேசிய சாதனை (national record) படைத்திருக்கிறார். அடுத்து வருகின்ற, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக மிக கடினமாக பயிற்சி எடுத்து வரும். ரோகித் அவர்களுக்கு நாம் அத்தனைபேரும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். அதே மாதிரி, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த ஷர்வானிகா இங்கே நம்மோடு உட்காந்திருக்கிறார். சதுரங்கப் போட்டியில் இன்றைக்கு இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு வீராங்கனைதான் ஷர்வானிகா. அவங்களுடைய வயது கூட இன்னும் 10 வயது ஆகவில்லை.
ஆனால், கிட்டத்தட்ட 10 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை ஏற்கனவே வென்று காட்டியுள்ளார்கள். இது ஷர்வானிகாவுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பெருமை என்பதை விட, it is a proud moment for Indian Chess, குறிப்பாக தமிழ்நாடு Chess விளையாட்டுக்கு இது பெருமையான தருணம் என்று சொல்லலாம். ரோகித் ஷர்வானிகா மாதிரி. இன்னும் பல நூறு வீரர்கள் உங்களில் இருந்து வருவார்கள் என்ற நம்பிக்கை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இருக்கிறது. அதற்காகத்தான், தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன். உயரிய ஊக்கத்தொகை என அனைத்து வகையிலும், நம்முடைய அரசு உங்களுக்கு துணை நிற்கின்றது. இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஏன் என்றால், பயிற்சியும், மன உறுதி இருந்தால், நீங்கள் நிச்சயம் சாதித்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு இருக்கின்றது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தயாராக இருக்கின்றார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து வெல்லட்டும். என்று கூறினார்.