Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.173.81 கோடி செலவிலான மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.10.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காட்பாடி அரசு மருத்துவமனை, பழனி மாவட்ட தலைமை மருத்துவமனை, திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, கூடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, சங்கராபுரம் அரசு மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் 108 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மருந்து கிடங்குகள், மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் 1.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆய்வகக் கட்டடம், சென்னையில் 14.85 கோடி ரூபாய் செலவில் புதிய மருந்து கட்டுப்பாடு நிர்வாக இயக்கக கட்டடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 இலட்சம் ரூபாய் செலவில் உதவி மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகக் கட்டடம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தில் சார்பில் 6 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் சார்பில் 20 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தஞ்சாவூர், சேலம், பாளையங்கோட்டை உணவுப் பகுப்பாய்வு கூடங்களில் 24 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன உபகரணங்களை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

காட்பாடி அரசு மரூத்துவமனை

2021-2022 ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில், வேலுார் மாவட்டம் காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, காட்பாடியில் 14.30 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார். இம்மருத்துவமனைக் கட்டடத்தில் வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், சிறிய அறுவை அரங்கம், ஆய்வகம், ஆண்கள் பிரிவு (10 படுக்கைகள்), பெண்கள் பிரிவு (10 படுக்கைகள்), அவசர சிகிச்சை (10 படுக்கைகள்), மகப்பேறு பிரிவு (12 படுக்கைகள்), குழந்தைகள் பிரிவு (10 படுக்கைகள்), தொற்றுநோய் (2 படுக்கைகள்), அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் கவனிப்பு பிரிவு (6 படுக்கைகள்) ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1.40 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

காட்பாடி புதிய அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், 1 அலுவலக கண்காணிப்பாளர், 1 இளநிலை உதவியாளர் மற்றும் 1 தட்டச்சர், 5 செவிலியர்கள், 1 மருந்தாளுநர், 1 கதிர்வீச்சாளர், 1 ஆய்வக நுட்புநர் நிலை –II, 1 இயன்முறை சிகிச்சையாளர் நிலை-II மற்றும் 1 மகப்பேறு உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பழனி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனை தற்போது 207 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1670 வெளிநோயாளிகள், 185 உள்நோயாளிகள், மாதத்திற்கு 146 பிரசவங்கள், 264 பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. பழனி அரசு மருத்துவமனையினை தரம் உயர்த்தும்பொருட்டு 9 கோடி ரூபாய் செலவில் தரைத்தளத்துடன் கூடிய நான்கு மாடிக்கட்டடம் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

அக்கட்டடத்தின், தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, TAEI பிரிவும் முதல் தளத்தில் அறுவைசிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவும், இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கும், மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் அலுவலகமும் கட்டப்பட்டுள்ளது. மேலும், 56 படுக்கைகள் அதிகரித்து பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது 263 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்படும்.

திருப்பத்தூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை தற்போது 440 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1404 வெளிநோயாளிகள், 156 உள்நோயாளிகள், மாதத்திற்கு 187 பிரசவங்கள், 769 பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனை 2023-ஆம் ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், இம்மருத்துவமனையை வலுப்படுத்தும் பொருட்டு 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், தரைத்தளத்துடன் கூடிய 6 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். மேலும் 3.83 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

.

அக்கட்டத்தில் தரைத்தளத்தில் பொது, குழந்தைகள் மற்றும் எலும்பு சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, மருந்தகம், கதிர்வீச்சு அறை, ஆய்வகமும், முதல் தளத்தில் மருந்து கிடங்கு, சிறப்பு சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவு, ஆயுஷ் வெளிநோயாளிகள் பிரிவு, முதன்மை மருத்துவ அலுவலர் அறை, பணியில் உள்ள மருத்துவர்களுக்கான அறையும், இரண்டாவது தளத்தில் இரத்த சுத்திகரிப்பு பிரிவு, பொது மற்றும் எலும்பு முறிவு அறுவை அரங்கு, பணியாளர்கள் அறையும், மூன்றாவது தளத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, காது மூக்கு தொண்டை மற்றும் கண் சிகிச்சை பிரிவு, கண் அறுவை அரங்கு, மத்திய கிருமி நீக்கி மற்றும் வழங்கல் துறையும் (CSSD), நான்காவது தளத்தில் குழந்தைகள் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முதலமைச்சரின் ஒருங்கிணைந்த விரிவான காப்பீட்டு திட்ட பிரிவு, தேசிய சுகாதார காப்பீட்டு திட்ட பிரிவும், ஐந்தாவது தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அறுவை சிகிச்சை பிரிவு, மருத்துவ பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும், ஆறாவது தளத்தில் கூட்ட அரங்கம் மற்றும் ஒருங்கிணைந்த ஆய்வகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடம் திறக்கப்பட்டதன் மூலம் 160 படுக்கைகள் அதிகரித்து திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது 600 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்படும்.

கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை தற்போது 128 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 467 வெளிநோயாளிகள், 62 உள்நோயாளிகள், மாதத்திற்கு 41 பிரசவங்கள், 46 பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. கூடலூர் அரசு மருத்துவமனை 2023-ஆம் ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், இம்மருத்துவமனையை வலுப்படுத்தும் பொருட்டு 15 கோடி ரூபாய் செலவில் 3 தனிக் கட்டடங்களாக கட்டப்பட்டுள்ளது. இதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை (TAEI) மற்றும் கண் சிகிச்சை பிரிவுகள் ஆகிய இரண்டு கட்டடங்கள் தனித்தனியே தரைத்தளத்துடன் கூடிய ஒரு மாடி கட்டிடமாக தலா 20 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், 3.34 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடங்களால் 40 படுக்கைகள் அதிகரித்து, கூடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது 168 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்படும்.

சங்கராபுரம் அரசு மருத்துவமனை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு மருத்துவமனை தற்போது 56 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 518 வெளிநோயாளிகள், 32 உள்நோயாளிகளும், மாதத்திற்கு 12 பிரசவங்கள், 72 பெரிய அறுவை சிகிச்சைகள் 36,520 ஆய்வக பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. சங்கராபுரம் அரசு மருத்துவமனையினை வலுப்படுத்தும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். மேலும், 75 இலட்சம் ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இக்கூடுதல் மருத்துவமனைக் கட்டடத்தின், தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு (10 படுக்கைகள்), தொற்றாநோய் பிரிவும், முதல் தளத்தில் பொது ஆண்கள் பிரிவு (10 படுக்கைகள்), பொது பெண்கள் பிரிவு

(10 படுக்கைகள்), இரத்த சேமிப்பு மையம் மற்றும் மருத்துவ ஆவண அறையும், இரண்டாவது தளத்தில் அறுவை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு (6 படுக்கைகள்), ஆண்கள் அவசர சிகிச்சை பிரிவு (6 படுக்கைகள்), பெண்கள் அவசர சிகிச்சை பிரிவு (5 படுக்கைகள்), ஆகிய பிரிவுகள் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், 47 படுக்கைகள் அதிகரித்து, சங்கராபுரம் அரசு மருத்துவமனையானது 103 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்படும்.

மேலூர் அரசு மருத்துவமனை

மதுரை மாவட்டம், மேலூர் அரசு மருத்துவமனை தற்போது 108 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1216 வெளிநோயாளிகள், 79 உள்நோயாளிகளும், மாதத்திற்கு 93 பிரசவங்கள், 122 பெரிய அறுவை சிகிச்சைகள், 25,588 ஆய்வக பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. மேலூர் அரசு மருத்துவமனையை வலுப்படுத்தும் வகையில் 9.20 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தின், தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, சி.டி.ஸ்கேன், ஊடுகதிர், மருத்துவ ஆவண அறையும், முதல் தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவும் (40 படுக்கைகள்) இரண்டாவது தளத்தில் அவசர சிகிச்சை அறுவை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு (20 படுக்கைகள்) ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், 60 படுக்கைகள் அதிகரித்து மேலூர் அரசு மருத்துவமனையானது 168 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்படும்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுமார்

1.00 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுமார் 20,000 சதுர அடியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் 6 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட மருந்து கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இப்புதிய மருந்து கிடங்கு மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகள், 54 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 40 பிற அரசு மருந்தகங்கள் / கால்நடை மருந்தகங்கள் பயன்பெறும். இம்மருந்துக் கிடங்கில் 1 மருந்துக் கிடங்கு அலுவலர், 1 மருந்தாளுநர், 1 கணினி இயக்குநர், 2 கட்டுநர் மற்றும் 3 கிடங்கு காவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், குனிச்சி கிராமத்தில் 1.11 ஏக்கர் பரப்பளவில் சுமார் 16,000 சதுர அடியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் 6 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட மருந்து கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இப்புதிய மருந்து கிடங்கு மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகள், 36 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 35 பிற அரசு மருந்தகங்கள் / கால்நடை மருந்தகங்கள் பயன்பெறும். இம்மருந்துக் கிடங்கில் 1 மருந்துக் கிடங்கு அலுவலர், 1 மருந்தாளுநர், 1 கணினி இயக்குநர், 2 கட்டுநர் மற்றும் 3 கிடங்கு காவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, ஆலத்தூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை வளாகத்தில் சுமார் 1.17 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20,000 சதுர அடியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கீழ் 6 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட மருந்து கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இப்புதிய மருந்து கிடங்கு மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 11 அரசு மருத்துவமனைகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 பிற அரசு மருந்தகங்கள் / கால்நடை மருந்தகங்கள் பயன்பெறும். இம்மருந்துக் கிடங்கில் 1 மருந்துக் கிடங்கு அலுவலர், 1 மருந்தாளுநர், 1 கணினி இயக்குநர், 2 கட்டுநர் மற்றும் 3 கிடங்கு காவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு கிராமத்தில் 1.00 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20,000 சதுர அடியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் 6 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட மருந்து கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இப்புதிய மருந்து கிடங்கு மூலமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 7 அரசு மருத்துவமனைகள், 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 12 பிற அரசு மருந்தகங்கள் / கால்நடை மருந்தகங்கள் பயன்பெறும். இம்மருந்துக் கிடங்கில் ¬¬¬¬¬1 மருந்துக் கிடங்கு அலுவலர், 1 மருந்தாளுநர், 1 கணினி இயக்குநர், 3 கட்டுநர் மற்றும் 3 கிடங்கு காவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட மருந்து கிடங்கில் உள்ள இடநெருக்கடியை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் தற்போதுள்ள மதுரை மாவட்ட மருந்து கிடங்கின் வளாகத்தில் 6 கோடி ரூபாய் செலவில் சுமார் 20,200 சதுர அடியில் புதிய கூடுதல் மருந்து கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தடையின்றி மருந்துகளை வழங்குவதற்கு தேவையான மருந்துகளை சேமித்து வைக்க உதவும்.

திருநெல்வேலி மாவட்ட மருந்து கிடங்கில் உள்ள இடநெருக்கடியை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்போதுள்ள மாவட்ட மருந்து கிடங்கிற்கு அருகில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் சுமார் 20,700 சதுர அடியில் 6 கோடி ரூபாய் செலவில் கூடுதல் மருந்து கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தடையின்றி மருந்துகளை வழங்குவதற்கு தேவையான மருந்துகளை சேமித்து வைக்க உதவும்.

தஞ்சாவூர் மாவட்ட மருந்து கிடங்கில் உள்ள இடநெருக்கடியை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் தற்போதுள்ள தஞ்சாவூர் மாவட்ட மருந்து கிடங்கின் வளாகத்தில் சுமார் 17,100 சதுர அடி பரப்பளவில் 6 கோடி ரூபாய் செலவில் புதிய கூடுதல் மருந்து கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தடையின்றி மருந்துகளை வழங்குவதற்கு தேவையான மருந்துகளை சேமித்து வைக்க உதவும்.

தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மொத்தம் 42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 மாவட்ட மருந்து கிடங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை

தஞ்சாவூர், சேலம் மற்றும் பாளையங்கோட்டை உணவுப் பகுப்பாய்வு கூடங்களில் GCMSMS (Gas Chromatography Mass Spectrometry), LCMSMS (Liquid Chromatography Mass Spectrometry), ICPMS (Inductively coupled plasma mass spectrometry) ஆகிய மூன்று அதிநவீன உபகரணங்கள் தலா 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டு, பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இந்த உபகரணங்கள் நிறுவப்படுவதன் மூலம் உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லிகளின் அளவுகள், கால்நடை மருந்து இருப்பின் அளவுகள், மைகோடாக்ஸின், வைட்டமின் மற்றும் கனிமங்களின் அளவுகள் ஆகியவற்றை கண்டறிந்து உணவின் தரத்தினை உறுதி செய்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும்.

மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் சுமார் 2,000 சதுர அடி கட்டுமான பரப்பில் தமிழ்நாடு சுகாதார திட்டம் மூலம் 1.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆய்வகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். இப்புதிய ஆய்வகத்தில் உணவு மாதிரிகளில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளையும், அனைத்து விதமான வேதியியல் பகுப்பாய்வுகளையும் மேற்கொள்ள முடியும்.சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் மருந்துக் கட்டுப்பாடு இயக்கத்திற்கு 14 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – வாலாஜாபாத் வட்டம், ஊத்துக்காட்டில் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி மருந்துக் கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் – அன்னூர் மற்றும் காலாம்பாளையம், திருப்பூர் மாவட்டம் – பல்லடம், மதுரை மாவட்டம் – அலங்காநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் – எஸ்.வி. நகரம் மற்றும் கண்ணமங்கலம், சிவகங்கை மாவட்டம் – காரைக்குடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சித்தா பிரிவுக் கட்டடங்கள், மதுரை மாவட்டம் – மேலக்காலில் ஆயுர்வேதா பிரிவுக் கட்டடம், சென்னை – அரும்பாக்கம், அரசு சித்தா மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு பிரிவுக்கான கூடுதல் கட்டடம் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவியர் விடுதி கூடுதல் கட்டடம், என மொத்தம் 6 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் சார்பில் சென்னை – அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக் கட்டடம் மற்றும் சென்னை – அரும்பாக்கம், அரசு யுனானி மருத்துவக் கல்லூரியை மேம்படுத்திட புதிய கட்டடம், என மொத்தம் 20 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.