தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகஅரசு சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜாகண்ணப்பன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகிய 6 அமைச்சர்கள் மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்பு மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் எதிரில் உள்ள நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதே போல், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனிடையே மருது பாண்டியர்களின் நினைவு கூர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்! " இவ்வாறு தெரிவித்துள்ளார்.
