வடகிழக்கு பருவமழையை ஒட்டி, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை : வடகிழக்கு பருவமழையை ஒட்டி, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,"தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (21.10.2025) தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட காணொலி காட்சி வாயிலாக ஆய்வு ஆட்சித்தலைவர்களுடன் மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்விற்குப் பிறகு, இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தினால் ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பின்வரும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளை (Monitoring Officers) தத்தமது மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தினார்கள்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம்:
*திருவள்ளூர் - எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன்காஞ்சிபுரம் - தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி
*செங்கல்பட்டு- தமிழக திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கிரந்தி குமார்
*விழுப்புரம் - தொழிலாளர் நலன் துறை இயக்குநர் ராமன்
*கடலூர் - சுரங்கம் மற்றும் கனிமவள இயக்குநர் மோகன்
*மயிலாடுதுறை- கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் - கவிதா ராமு
*திருவாரூர் - ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த்
*நாகப்பட்டினம் - தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் - அண்ணாதுரை
*தஞ்சாவூர் - தமிழக மருத்துவ சேவைகள் கழகத்தின் கிருஷ்ணனுன்னி
*கள்ளக்குறிச்சி- மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் வெங்கட பிரியா
*அரியலூர்- இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் விஜயலட்சுமி
*பெரம்பலூர்- மாற்றுத்திறனாளிகள் நலன் கமிஷனர் லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் உடனடியாக மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக துவங்குமாறு அறிவுறுத்தினார்.