சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித் தொகை தரும் அன்புக் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அதில், "பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நான் இருக்கிறேன், இனி கவலை வேண்டாம். திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள் இன்று. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க பாடுபடுவதுதான் திராவிட மாடல். சாமானிய மக்களின் எழுச்சியில் உருவானது தான் திராவிட இயக்கம். மக்களுடன் மக்களாய், மக்களின் குரலாய் திமுக தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது. மக்களுக்கு தேவையான அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில் செய்து கொடுக்கப்படுகிறது.
அரசியல் என்பது மக்கள் பணி, எங்களை பொறுத்தவரை சொகுசுக்கு இடம் இல்லை. நான் காலையில் ஒரு இடத்தில மக்கள் கூட பேசிட்டு இருப்பேன், மாலை பல நூறு கி.மீ கடந்து இன்னொரு பகுதியில் மக்களுடன் இருப்பேன்.இதைதான், பெரியார், அண்ணா, கலைஞர் எங்களுக்கு சொல்லித்தந்தது. இதனால்தான் கடைக் கோடி மக்களுக்கு என்ன வேண்டும்? என எங்களால் பார்த்து பார்த்து செய்ய முடிகிறது.எங்களின் அடிப்படை பதவி அல்ல, பொறுப்புதான். இது வாக்கு அரசியலுக்காக செய்யவில்லை. எப்பவும் மக்களுடன் இருப்பதால் அவர்களது தேவை அறிந்து திட்டங்கள் கொண்டு வருகிறோம்.
காலை உணவு திட்டம் என்பது வாக்கு அரசியலுக்காக தொடங்கியதா?. பள்ளிக்கு பசியுடன் வரும் குழந்தைகளை பார்த்து காலை உணவு திட்டத்தை தொடங்கினேன். கொரோனாவில் பெற்றோரை இழந்த 11,700 குழந்தைகளுக்கு ரூ.517 கோடி வழங்கியது வாக்கு அரசியலா?. கொரோனா காலத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கினோம். மக்கள் நம்பிக்கையை பெறுவதே வாக்கு, அந்த நம்பிக்கையை பெறும் கொள்கை எங்களிடம் உள்ளது. வாக்கு என்பது மக்களின் நம்பிக்கை பெறுவதற்கான அடையாளம். நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை."இவ்வாறு தெரிவித்தார்.