பெங்களூரு: முதல்வர் பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன் என உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் போர்க்கொடி தூக்கியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்வார் எனவும் துணை முதல்வர் டிகே சிவகுமார் அடுத்த முதல்வராக பதவி ஏற்பார் என பரபரப்பாக பேசப்படும் நிலையில் பெங்களூரு, சதாசிவா நகரிலுள்ள வீட்டில் உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநில முதல்வர் பதவி தற்போது காலியாக இல்லை. முதல்வராக சித்தராமையா பதவி வகிக்கும் நிலையில் முதல்வர் மாற்றம், அடுத்த முதல்வர் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். மேலிட பொறுப்பாளர் சுர்ஜே வாலா முன்னிலையில் வேறு எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இரண்டரை வருடத்திற்கு பிறகு முதல்வர் மாற்றம் என கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அதே நேரம் ,சில தவிர்க்க முடியாத நேரங்களில் மேலிட தலைமை முதல்வரை மாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன். 2013ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைவதற்கு அனைவரது பங்களிப்பு அதிகம். ஆனால், இதற்காக நான் ஒருபோதும் மார்தட்டிக்கொண்டதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* கார்கே கைவிரிப்பு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வர் சித்தராமையா இரண்டாவது முறையாக சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ‘முதல்வர் மாற்றம் என்பது தற்போது கிடையாது. இது மீடியாக்களின் கற்பனை. அப்படி எதுவாக இருந்தாலும் என் கையில் எதுவும் இல்லை. ராகுல் காந்தி தலைமையிலான கட்சி மேலிடம் சேர்ந்து முடிவெடுக்கும்’ என்றார்.
இந்நிலையில் அமைச்சரவையில் இடம் பிடிக்க காங்கிரசில் குதிரை பேரம் நடப்பதாகவும், மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவுக்கு ரூ.200 கோடி வரை கொடுக்க எம்எல்ஏக்கள் தயாராக இருப்பதாகவும் மேலவை பாஜ எதிக்கட்சி தலைவர் சலுவாதி நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


