செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்
திருப்போரூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவு என 5 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன், செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க 16221 பள்ளி மாணவர்களும், 6951 கல்லூரி மாணவர்களும், 717 மாற்றுத்திறனாளிகளும், 744 அரசு ஊழியர்களும், பொதுப்பிரிவில் 14018 நபர்களும் என மொத்தம் 38651 பேர் இந்த போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மேலக்கோட்டையூரில் உள்ள விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா தலைமை தாங்கினார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன், பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளை ஆடி, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கி வைத்தார். இந்த, போட்டிகள் மேலக்கோட்டையூரில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 10ம்தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு போட்டிக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 2000 ரூபாய், மூன்றாம் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். அதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.