Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு: கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2025 நிறைவு விழாவில் முதல் மூன்று இடங்களை பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2025 நடத்திட மொத்தம் 83.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 37 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் நடைபெற்ற மிகப்பெரிய விளையாட்டு போட்டியாகும்.

இது, தமிழ்நாடு அரசு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான மைல்கல் ஆகும். இதன்மூலம் அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபடச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திறமையான வீரர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். இவ்வரசு பொறுப்பேற்றது முதல், விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திடும் வகையில் அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல்; உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் வெறும் போட்டிகளாக அல்லாமல், வயது, பகுதி, போன்ற எல்லைகளைத் தாண்டிய திறமை மற்றும் உறுதியின் கொண்டாட்டமாக மாறியுள்ளன. இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த 83.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டின் வெற்றிகரமான அனுபவம், இவ்வாண்டு போட்டியை மேலும் பெரிய அளவில் நடத்த வழிவகுத்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பர் 12, 2025 அன்று நிறைவடைந்து, மாநில அளவிலான போட்டிகள் அக்டோபர் 2 முதல் 14, 2025 வரை நடைபெற்றன.

2025-ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 16,28,338 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவினராவர். மொத்தம் 38 தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் அவர்கள் பங்கேற்றனர். இதில் 32,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டிகள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 13 நகரங்களில் நடைபெற்றன.

மாநில அளவிலான போட்டிகளில் பரிசுத் தொகை, தனிநபர் பிரிவில், முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1,00,000/-, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.75,000/-, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.50,000/-மும், குழு விளையாட்டுகளில், முதலிடத்தில் வெற்றிபெற்ற அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ. 75,000/-, இரண்டாம் இடத்திற்குரிய அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ. 50,000/-, மூன்றாம் இடத்திற்குரிய அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ. 25,000/-மும், இதனுடன் கல்வி உதவித் தொகைகள், அங்கீகாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற பல நன்மைகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டின் முக்கிய அம்சமாக, e-Sports முதன்முறையாக போட்டி நிகழ்வாகவும், மற்ற போட்டிகளுக்கு நிகராக பரிசுத்தொகையுடன் நடத்தப்பட்டது. மேலும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அளிக்கப்படும் ஆதரவையும் உறுதிப்படுத்தியது.

இதற்கு முன் இல்லாத அளவிலான பதிவு எண்ணிக்கைகள், பெரும் பரிசுத் தொகை மற்றும் e-Sports போன்ற புதுமையான பிரிவுகளின் அறிமுகத்துடன், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்- 2025, தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய மற்றும் அனைவர் பங்கேற்பும் உறுதி செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வாக அமைந்தது. இது தமிழ்நாடு அரசின் விளையாட்டு வளர்ச்சிக்கான பார்வையையும், சமூக பங்கேற்பையும் ஊக்குவிக்கும் உறுதியையும் பிரதிபலிக்கிறது. மேலும், Games Management System (GMS) மூலம் முதலமைச்சர் கோப்பை தொடர்பான அனைத்து தகவல்களும் — பதக்க நிலை, வெற்றியாளர்கள் பட்டியல், மதிப்பெண்கள், வீரர் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் — அதிகாரப்பூர்வ இணையதளம் www.tncmtrophy.sdat.in மூலம் துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் முதன்முறையாக ஒரு WhatsApp Chatbot அறிமுகப்படுத்தப்பட்டு, இதன்மூலம் பயனர்கள் போட்டி மதிப்பெண்கள், முடிவுகள் மற்றும் நிகழ்வு புதுப்பிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். இந்திய அளவில் முதல் முறையாக, இத்தகைய டிஜிட்டல் வசதிகள் அடிப்படை நிலை விளையாட்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நவீன முயற்சியின் மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) முழுமையான நிகழ்வு மின்மயப்படுத்தலில் (Digitization) முன்னோடியாக திகழ்கிறது. இதன்மூலம் விளையாட்டு வீரர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எளிமையான அணுகல், வெளிப்படைத்தன்மை மற்றும் நேரடி தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2025ல் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளி, அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற ஐந்து பிரிவுகளின் கீழ் தடகளம், டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து, பளு தூக்குதல் உள்ளிட்ட 37 வகை விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 196 போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில் 109 தங்கம், 90 வெள்ளி மற்றும் 82 வெண்கலம் என மொத்தம் 281 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் முதலிடத்தையும்; 36 தங்கம், 22 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 33 தங்கம், 27 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் என 95 பதக்கங்களுடன் கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்டங்களைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் நடத்தும் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் 25,000 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு போட்டிகளின் போது ஏற்படும் விபத்துகளினால் உண்டாகும் உடற்காயங்கள் மற்றும் உயிரிழப்பினை ஈடுசெய்து உதவிடும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பீச் வாலிபால் வீராங்கனைகள் எஸ். பவித்ரா, கே. தீபிகா மற்றும் பாரா டெபிள் டென்னிஸ் வீராங்கனை ஆர். தீபிகா ராணி ஆகியோருக்கு முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், டிராக் சைக்கிள் வீரர் பி. பிரதீப் அவர்களுக்கு 3.50 லட்சம் ரூபாய்க்கான டிராக் சைக்கிள், கேரம் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வீராங்கனை எம். காசிமா, வீரர் அப்துல் ஆசிப் ஆகியோருக்கு தலா 1.5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர் கே. முத்துராஜா, வீராங்கனைகள் டி. சசிகலா, கீர்த்திகா ஆகியோருக்கு தலா 1.65 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

முன்னதாக, “தமிழுக்கு வணக்கம்” பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2025 குறித்த காணொலி மற்றும் முதலமைச்சர் கோப்பை பாடல் இசை நிகழ்ச்சி ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். இதில் முதலமைச்சர் கோப்பை பாடல் இசை நிகழ்ச்சியில் வயது முதிர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இ. பரந்தாமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் நீச்சல் வீரர் பெனடிக்டன் ரோகித், சதுரங்க சாம்பியன் ஷர்வானிகா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.