முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்; சென்னை பெண்கள் வரவேற்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெற்றோர் – குழந்தைகளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு சென்னை மாநகரப் பெண்களிடமும் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது முத்திரைத் திட்டங்களில் ஒன்றாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதிலும் தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இன்று முதல் நகர்ப் புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார்கள். இத்திட்டம் பெண்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களில் சிலர் தம்முடைய மகிழ்ச்சியைப் பதிவு செய்து காலை உணவுத் திட்டத்தை வரவேற்றுள்ளார்கள்.
சென்னை சாந்தோம் பகுதியைச் சேர்ந்த கேத்ரின் கூறுகையில்; தினமும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் காலை வேளையில் பரபரப்பாக சமையலில் ஈடுபடுகிறேன். காலை உணவு, மதிய உணவு இரண்டையும் தயாரித்து பள்ளிக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ள காலை உணவுத் திட்டத்தை சென்னையிலும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இத்திட்டம் என்னைப் பொறுத்தவரை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப்போல குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் மற்ற தாய்மார்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
காலையில் பள்ளிக்குப் புறப்படும்போது, என் பெண் குழந்தை சாப்பிடாமலே சென்று விடுவாள். அது எனக்கு மனக் கவலையையும் மன உளைச்சலையும் தரும். தற்போது இந்தத் திட்டத்தால் பள்ளிக்கு பசியோடு செல்லும் என் மகள், அங்கு மற்ற குழந்தைகளுடன் அமர்ந்து சூடாகச் சாப்பிட்டு வருகிறாள். இது என் கவலையைத் தீர்ப்பதுடன் என் மகள் பள்ளிப் பாடத்திலும் முழு கவனத்துடன் செலுத்துகிறாள். விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறாள். இதைக் காணும்போது பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை மனசார வரவேற்கிறேன். முதலமைச்சர் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திருமதி ஜுலி சாந்தோம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தாய்; என் குழந்தை காலையில் பள்ளிக்குச் செல்வதற்கு முன் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிப்பாள். நான் கெஞ்சி கெஞ்சி ஊட்டினாலும் அவள் சாப்பிட மாட்டாள். நேரமாகிவிட்டது பள்ளிக்கு கிளம்பு என என் கணவர் அவசரப்படுத்துவார். இது எனக்கு பெரிய கவலையை ஏற்படுத்துவதாக நாள்தோறும் அமைந்திருந்தது. தற்போது, என் குழந்தை பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிட்டு மகிழ்ச்சியோடு பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும், காலையில் கேசரி சாப்பிட்டேன், இட்லி சாப்பிட்டேன், பொங்கல் சாப்பிட்டேன் எனக் கூறுவதை கேட்டு எனக்கு மகிழ்ச்சி தாங்க முடிவதில்லை. இதற்காக, தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
திருமதி சாந்தோம் சத்யா. . . எங்கள் வீட்டில் என் மகனை பள்ளிக்கு அனுப்புவதில் தினமும் பிரச்சினைதான், என் பொறுமையைச் சோதிப்பது போல், சாப்பிடுவதில் அவன் அடம்பிடிக்கிறான். எவ்வளவுதான் சொன்னாலும் அவன் கேட்பதில்லை. எனக்கு கோபம் வரும். சாப்பிடவில்லை என்றால் அடிப்பேன் என்று கையை ஓங்குவேன். என்னை உதறித் தள்ளிவிட்டு ஓடிவிடுவான். அவனுடைய அப்பா கையில் தட்டை எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே போய், இந்தா ஒரு வாய், ஒரு வாய் என்று கெஞ்சுவார். ஒரு வாய் வாங்குவான் அவ்வளவுதான், உதட்டை பிதுக்கிவிட்டு, வேண்டாம் என்று ஓடிவிடுவான். நேரம் ஆகிவிடுவதால், பசியோடு அவனை பள்ளிக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது ஆறாத மனவேதனையை தினம் தந்து கொண்டிருந்தது. தற்போது நான் பள்ளியில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று புறப்பட்டு விடுகிறான்.
பள்ளியில் காலை உணவுத் திட்டம் குழந்தையினுடைய ஆர்வத்தை வளர்க்கிறது. எங்களுடைய மனக்கவலையைப் போக்குகிறது. இந்தத் திட்டம் தந்த முதலமைச்சர் வாயார, மனசார வாழ்த்துகிறோம். இந்த அரசுக்கு எங்களுடைய பாராட்டுகள் என்று கூறினார் சத்யா. இவர்களைப்போல, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோரும் காலை உணவுத் திட்டம் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு பாராட்டுகிறார்கள்.