புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதாக கைதாகி பின்னர் விடுக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோருக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. டெல்லி மயூர் விஹாரில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
விஷ்ணு சிலையை சீரமைக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம்16ம் தேதி தலைமை நீதிபதி அளித்த உத்தரவு என்னை காயப்படுத்தியது. மனுதாரரின் கோரிக்கையை அவர் கேலி செய்தார். மனுதாரருக்கு நீங்கள் தீர்வை கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் கிண்டல் செய்யக் கூடாது. அது என்னை காயப்படுத்தியது. தலைமை நீதிபதியின் அந்த செயலுக்கான எதிர்வினைதான் எனது செயல்.
அதற்காக நான் எந்த வருத்தமும் அடையவில்லை. கடவுள் உத்தரவுப்படி நான் அச்செயலை செய்துள்ளேன். நான் எம்எஸ்சி, பிஎச்டி, எல்எல்பி படித்துள்ளேன். படிப்பில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளேன். நான் ஒன்றும் போதைக்கு அடிமையானவன் கிடையாது. எனது விரக்தியை இப்படி காட்டி உள்ளேன். தலைமை நீதிபதி தலித் என்பதால் அவருக்கு சாதகமாக பேசப்படுகிறது. அவர் ஒன்றும் தலித் அல்ல. முதலில் அவர் சனாதன இந்து. பின்னர் தனது நம்பிக்கையை துறந்து புத்த மதத்தை தழுவியவர் என்றார்.
* ‘நீதிபதிகளின் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது’
இந்த நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி கவாய், ‘‘நீதிபதிகளின் வாய்மொழி கருத்துக்கள் கூட சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்படுகிறது. ஒரு வழக்கு விசாரணையின் போது எனது சக நீதிபதி வினோத் சந்திரன் ஏதோ கருத்தை தெரிவிக்க முயன்றார். அதை நான் தடுத்தேன். தனிப்பட்ட முறையில் என்னிடம் மட்டும் கூறுமாறு சொன்னேன். ஏனென்றால் சமூக ஊடகங்களில் என்ன மாதிரியாக அவரது கருத்துக்கள் பரப்பப்படும் என்பது தெரியாது’’ என்றார்.