Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு விவகாரம்; வக்கீலின் செயலை பாராட்டிய மாஜி போலீஸ் கமிஷனர்: பாஜகவில் சேர்ந்த பின் தொடரும் சர்ச்சை பேச்சு

பெங்களூரு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய வழக்கறிஞரை பாஜக மூத்த தலைவர் பாராட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் செருப்பு வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் செயலுக்கு பிரதமர் மோடி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்திய பார் கவுன்சில் அந்த வழக்கறிஞரை உடனடியாக இடைநீக்கம் செய்தது. இந்த நிலையில், கர்நாடக பாஜக மூத்த தலைவரும், பெங்களூரு முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ், தலைமை நீதிபதியைத் தாக்கிய வழக்கறிஞரின் செயலைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், ‘சட்டப்படி இது தவறாக இருந்தாலும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன்படி செயல்பட்ட உங்கள் (ராகேஷ் கிஷோர்) தைரியத்தை பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். பாஸ்கர் ராவின் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் தலைவர் மன்சூர் கான் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், ‘சட்டப்படி தவறு என்று தெரிந்தும் ஒருவரின் தைரியத்தை நீங்கள் பாராட்டுகிறீர்களா? முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியிடமிருந்து இதுபோன்ற கருத்து வருவது வெட்கக்கேடானது.

ஒரு காலத்தில் சட்டத்தை நிலைநாட்டிய நீங்கள், இன்று தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவருக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். இது மாபெரும் சங்கடம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். சர்ச்சை வலுத்ததை அடுத்து, பாஸ்கர் ராவ் தனது பதிவை நீக்கினார். உயர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி பாஸ்கர் ராவ், பாஜகவில் சேர்ந்த பின்னர் இதுபோன்ற சர்ச்சைக் கருத்துகளை அவ்வப்போது பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மத போதகர், யூடியூபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதலைத் தூண்டியதாக, மத போதகரான அனிருத்தாச்சாரியார் மற்றும் யூடியூபர் அஜித் பார்தி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. மிஷன் அம்பேத்கர் அமைப்பின் நிறுவனர் சூரஜ் குமார் பவுத், இதுதொடர்பாக இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம் சட்டப்படி அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘ அனிருத்தாச்சாரியார், அஜித் பார்தி ஆகிய இருவரின் தூண்டல் பதிவுகளே பதற்றத்தை அதிகரித்து, இந்திய நீதித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் வெளியான வீடியோ ஒன்றில், விஷ்ணு சிலை வழக்கு தொடர்பான தலைமை நீதிபதியின் கருத்துகளுக்கு எதிராக அனிருத்தாச்சாரியார் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இதேபோல், செருப்பு வீச்சு சம்பவத்திற்குப் பிறகு, யூடியூபர் அஜித் பார்தி தனது எக்ஸ் தளத்தில் நீதிபதியைக் குறிவைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்’ என்றார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நொய்டா காவல்துறை அஜித் பார்தியிடம் நேற்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.