Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு பீகார் தேர்தலில் 17 புதிய மாற்றங்கள்

பாட்னா: பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து கடந்த 1ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகாரில் தேர்தல் ஆயத்த பணிகளை கடந்த 2 நாட்கள் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், டெல்லி திரும்பும் முன்பாக நேற்று பாட்னாவில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அளித்த பேட்டி: 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதி முடிவடைகிறது.விரைவில் பீகார் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும். 22 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு தீவிர திருத்த பணிகள் மூலம் வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்பட்டுள்ளது. இப்பணியில் 90,207 பூத் நிலை அதிகாரிகள் பங்கேற்று பணியை சிறப்பாக முடிக்க உதவினர்.

இது, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்வதற்கான உத்வேகத்தை அளித்துள்ளது. பீகார் தேர்தலில் இம்முறை 17 புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை பின்னர் நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களில் பின்பற்றப்படும். முன்பு 1500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற இருந்த நிலையில் அது 1200 ஆக குறைக்கப்படுகிறது. எனவே பீகாரில் 12,817 புதிய வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு ள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம் பெறும். கட்சி சின்னம், பெயர்கள் தெளிவான தெரியும் படி அச்சிடப்படும். வாக்குச்சாவடியில் பணியில் இருக்கும் தேர்தல் அதிகாரிகள் இனி எளிதில் அடையாளம் காணும் வகையில் அடையாள அட்டை அணிந்திருப்பார்கள்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்போனை கொண்டு செல்லக் கூடாது. அங்குள்ள அறையில் செல்போன்களைஒப்படைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையான வெப்காஸ்டிங் வசதி செய்யப்படும். வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின் கடைசி 2 சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.

* 23 லட்சம் பெண்கள் நீக்கம்

மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பீகாரில் 3.5 கோடி பெண் வாக்காளர்கள் உள்ள நிலையில், 23 லட்சம் பெண்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் மற்றும் இஸ்லாமியர்கள். கடந்த 2020ல் நடந்த தேர்தலில் கடும் போட்டி நிலவிய 6 மாவட்டங்களில் 59 தொகுதிகளில் உள்ளவர்களின் பெயர்கள்தான் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 2020 தேர்தலில் பாஜ கூட்டணி 34 இடங்களையும், இந்தியா கூட்டணி 25 இடங்களை வென்றது. பிரதமர் மோடி, அமித்ஷா உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் மாபெரும் மோசடி செய்துள்ளது’’ என்றார்.