புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறினார். ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் இது பற்றி கூறியதாவது: மிதமான பணவீக்கத்தின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டான 10.1% ஒப்பிடும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த போதிலும் நடப்பு நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கு 6.3% முதல் 6.8% அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, நல்ல காரீப் அறுவடை மற்றும் சுமார் 400 பொருட்களின் விலைகள் குறைவதால் பணவீக்கம் குறைவாக இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சில பற்றாக்குறை இருக்கலாம். அது நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். இருப்பினும், முதல் காலாண்டில் 8.8 % இருந்த பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி , பலர் அஞ்சியதை விட,8% முதல் 8.3 அல்லது 8.5 %க்கு இடையே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.