Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் கடத்தப்பட்ட 440 சிலைகள், கலைப்பொருட்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் கடத்தப்பட்ட 440 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று (08.10.2025) ஆணையர் அலுவலகத்தில் சிலை மீட்புப் பணிகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது குறித்தும், மீட்கப்பட்ட சிலைகளை சம்மந்தப்பட்ட திருக்கோயில்களிடம் ஒப்படைத்தல் மற்றும் உலோகத் திருமேனிகளை பாதுகாக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கென சென்னை அசோக்நகரில் புதிய காவல் நிலையத்தை கடந்த பிப்ரவரி 2024 அன்று தொடங்கி வைத்ததோடு, இப்பிரிவுக்கு ஒரு காப்பாளர் (Curator) மற்றும் சட்ட உதவி ஆலோசகர் (legal advisor) பணியிடங்களை உருவாக்கி தந்துள்ளார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 30.09.2025 வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 239 உலோகச் சிலைகள், 98 கற்சிலைகள், 4 மரகதலிங்கங்கள், ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் என மொத்தம் 440 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 12 சிலைகளில் 10 சிலைகள் முறைப்படி சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவிற்கென கும்பகோணத்தில் இயங்கி வந்த நீதிமன்றத்தை தொடர்ந்து கூடுதலாக மதுரை மற்றும் சென்னையில் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கடத்தப்பட்ட 76 சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட அனுமன் சிலை உள்ளிட்ட 16 சிலைகளை இதற்கென அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலர்களை கொண்ட குழு சிங்கப்பூருக்கு சென்று ஆவணங்களையும் சாட்சிகளையும் முறையாக சமர்ப்பித்து அச்சிலைகளை தமிழகத்திற்கு மீட்டு கொண்டு வர உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கண்ணப்ப நாயனார் சிலை நெதர்லாந்து நாட்டின் கண்காட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏலம் விடப்படயிருந்த நிலையில் கண்டறியப்பட்டு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின் துரித முயற்சியால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அச்சிலைகளுக்கான ஆவணங்கள் அனைத்தும் நெதர்லாந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் அச்சிலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதேபோல் லண்டன் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் அல்மோஷன் கண்காட்சியகத்தில் கண்டறியப்பட்ட திருமங்கையாழ்வார் சிலையை மீட்டு கொண்டுவர தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து அச்சிலையை திரும்ப ஒப்படைக்க ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிலைகளை பாதுகாப்பாக வைக்க தமிழகத்தில் ஒன்பது இடங்களில் திருமேனி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக சென்னையில் சுமார் 1,000 சிலைகளை பாதுகாப்பாக வைத்திடும் வகையில் திருமேனி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவால் மெய்நிகர் அருங்காட்சியம் (Virtual museum) என்ற வகையில் வலைதளத்தில் 138 சிலைகள், 360 டிகிரி கோணங்களில் காணும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 300 சிலைகளை இவ்வகையில் உருவாக்கி வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சிலை திருட்டை தடுக்க சிலைகளில் நுண்ணிய கதிரியக்க மென்பொருளை பதித்துப் பாதுகாக்கின்ற வகையில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிறைவாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், முதலமைச்சர் தலைமையிலான அரசு, கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டதன் அடிப்படையில் இதுவரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 440 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த அரசு பொறுப்பேற்றபின், உலோகத் திருமேனிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் களவு எச்சரிக்கை மணி வசதியுடன் 1,889 பாதுகாப்பறைகள் கட்டிட அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 1,716 பாதுகாப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில்களிலிருந்து கடத்தப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், அதற்கு தேவையான உதவிகளை வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாதந்தோறும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு நம் கலைப் பொக்கிஷங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் வகையில் துறை அலுவலர்கள் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் டி.கல்பனா நாயக், இ.கா.ப., காவல்துறை தலைவர் அனிசா உசேன், இ.காப., காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். சிவக்குமார், இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் சி. ஹரிப்ரியா, மா. கவிதா, சி. கல்யாணி, இணை ஆணையர்கள் இரா.வான்மதி, கி.ரேணுகாதேவி, .சு.மோகனசுந்தரம், ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். குறிப்பிடப்பட்டுள்ளது.