“வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சென்னை :“வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது, ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும் நாம் இன்னும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். SIR பணிகளில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்திருந்தாலும், இன்னும் பாதி கிணற்றையே தாண்டியிருக்கிறோம். இனி வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றுவதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தங்கள் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிசெய்தல், போலி வாக்காளர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். கடந்த முறை போலவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக முகாம்கள் அமைத்து, தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,"இவ்வாறு தெரிவித்தார்.


