மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல,உரிமை ; அரசுடன் சேர்ந்து புதிய வரலாற்றை படைக்கப் போகிறார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை : உலக மாற்றுத் திறனாளிகள் விழாவில் 400 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது வெறும் கொண்டாட்டத்துக்கான நாள் மட்டுமல்ல.நடிகை ரோகிணியை திரைக்கலைஞர் என்பதற்கு பதில் சமூக கலைஞர் என்றே சொல்லலாம். சிலர் சமூக பணிகளை பாதியில் விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். மாறாக சமூக பணியில் தொடர்ந்து ரோகிணி ஈடுபட்டு வருகிறார். திராவிட மாடல் அரசு, மாற்றுத்திறனாளி தோழர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கி, சம உரிமையுடன் சமூகத்தில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளை உட்சேர்க்கும் சமூக முன்னேற்றமே உலக நாடுகளின் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இந்த கருப்பொருளையே மையமாகக் கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இதுவரை 60க்கும் மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3631 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்த மறுநாள் மாற்றுத்திறனாளிகள் சந்தித்து எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகள் நேரில் வாழ்த்து தெரிவித்த அந்த தருணமே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைத்த தருணம். எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதிகளாக நியமிக்கும்போது 30,000 பேர் அதிகாரம் பெறுவர். மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை உள்ளன்போடு அறிமுகப்படுத்தினார் கலைஞர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல உரிமை என்பதை அறிந்து திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. அரசுடன் சேர்ந்து மாற்றித்திறனாளிகளும் புதிய வரலாற்றை படைக்கப் போகிறார்கள். "இவ்வாறு பேசினார்.

