மகளிர் நல்வாழ்விற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.11.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 196 உதவியாளர் மற்றும் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்திற்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 19 திறன்மிகு உதவியாளர்-II (பொருத்துநர்– II) பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக 40 கோடி ரூபாய் செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மேம்மோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோ அனலைசர் (Semi-autoanalyser) உட்பட பல வசதிகளுடன் 1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் மருத்துவ ஊர்தியை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீன மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் நலவாழ்வு பெறவேண்டும் என்கிற உயரிய நோக்கில்;
அவர்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளித்திடும் “மக்களைத் தேடி மருத்துவம்”, சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48”, சிறப்பு மருத்துவ சேவைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே கொண்டு செல்லும் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மருத்துவத் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,576 உதவி மருத்துவர்கள், 48 பல் மருத்துவர்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியர்கள், 2,810 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7,413 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 555 உதவியாளர் பணியிடங்கள், 584 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 187 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 314 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.
பணி நியமன ஆணைகள் வழங்குதல்
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக 196 உதவியாளர்கள் பணியிடத்திற்கும், குடும்ப நல இயக்ககத்தின் கீழ் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தமிழ்நாடு மாநில போக்குவரத்து இயக்ககத்தின் கீழ்
19 திறன்மிகு உதவியாளர்-II (பொருத்துநர்– II) பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், என மொத்தம் 233 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ ஊர்தியை பார்வையிடுதல்
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக 40 கோடி ரூபாய் செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு ஏற்படும் மூன்று முக்கிய புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் 1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ ஊர்தியின் மூலம், பெண்கள் வசிக்கும் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மூன்று முக்கிய புற்றுநோய்களான கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களுக்கான பரிசோதனை மற்றும் பிற முக்கிய நோய்களான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இருதய நோய்கள் போன்றவற்றிற்கான பரிசோதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் மேம்மோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோஅனலைசேர் (Semi-autoanalyser) உட்பட பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வாகனமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து, மேலும் 37 வாகனங்கள் 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்படும்.
