Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் "சாதி ஆணவப் படுகொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக தனிச் சட்டம் உருவாக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண் இந்த தமிழ் மண்!

'சாதி யிரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்' என்கிறார் அவ்வை மூதாட்டி. இதுதான் தமிழர் தம் நெறியாகும். தமிழர் போற்றி வந்த பண்பாடு ஆகும்.

இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது, சாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது. உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது. மேல் - கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது.

சீர்திருத்தக் கருத்துகள் இயக்கமாக ஆகின்றன. அயோத்தி தாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இந்த சீர்திருத்தச் சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தார்கள்

கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள், அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றைத் தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே இந்த இயக்கங்கள் போராடியது. வாதாடியது. மன மாற்றங்களைச் செய்தது. ஜாதிக்கு, மதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கங்கள் விதைத்தது. இனமும், மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியது இதன் சாதனைகள் ஆகும்.

சீர்திருத்தக் கருத்துகளை பரப்புரை செய்து வந்த அதே காலக்கட்டத்தில் அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து சமூக சீர்திருத்த ஆட்சியை தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தினார்கள். அதன் வழித்தடத்தில் 'திராவிட மாடல் ' ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம்.

பெரியார் பிறந்த நாளிலும், அம்பேத்கர் பிறந்த நாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது.

இவர்கள் பிறந்தநாளில் அனைவரும் சமூகநீதி, சமநீதி உறுதிமொழி எடுப்பது சாதாரணமான சாதனை அல்ல.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 29.04.2025 அன்று உரையாற்றிய போது, ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இருக்கும் காலனி என்ற சொல்லை நீக்குவோம் என்று அறிவித்தேன்.

பள்ளி, கல்லூரி விடுதிகளில் இருக்கும் சாதிப் பெயரை நீக்கி இருக்கிறோம்.

அதனை சமூக நீதி விடுதியாக மாற்றி இருக்கிறோம்.

சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - பொதுவுடமை - பொது உரிமை - கல்வி உரிமை - அதிகார உரிமை ஆகிய கொள்கைகள் தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும். அதனைத் தான் நாங்கள் செய்து வருகிறோம்.

இதன் மூலமாகத் தான் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனை அடைய வைத்துள்ளன. இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள், நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது.

உலகம் அறிவு மயமாகி வருகிறது. ஆனால் அன்புமயம் ஆவதை எது தடுக்கிறது? என்பது தான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது. உலகம் முழுக்க பரவி, நம் அறிவினால் மதிக்கப்பட்டு வரும் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக் கொள்வது என்ன நியாயம்? என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வி ஆகும்.

எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாது. கொல்வதை மட்டுமல்ல பகைப்பதை, சண்டை போட்டுக் கொள்வதை, அவமானப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வப்போது ஏதேனும் ஒருபகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்து விடுகிறது. இந்த வேதனையைத் தான் நேற்றைய தினம் நமது உறுப்பினர்கள் பலரும் வெளிப்படுத்தினீர்கள்.

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். சமீபத்தில் செங்கல்பட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள்.

இது போன்ற ஆணவப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படுகொலைகளுக்கு சாதி மட்டுமே காரணம் அல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. எதன் பொருட்டு நடந்தாலும் கொலை, கொலை தான். அதற்கான தண்டனைகள் மிக மிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

யாரும் எவரும் எதன் பொருட்டும் செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பி விடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாக போட்டுள்ளோம். எனவே சட்டம் அதன் கடமையைச் செய்கிறது. அதே நேரத்தில் இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூக சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

நாகரீக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும்.

அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும் - சமத்துவச் சிந்தனையும் கொண்ட, சுயமரியாதையும் - அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை - ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை!

சீர்திருத்தப் பரப்புரையும் - குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். சாதி ஆணவப்படுகொலையை தடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற நீதியரசர் கே.எம்.பாட்ஷா தலைமையில் ச‌‌ட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட புதிய ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம், அரசியல் இயக்கங்கள், ச‌‌ட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் அறிந்து, பரிந்துரைகளை வழங்கும் அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, ஆணவப்படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றும் என்று உறுதியளிக்கிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.