திருவனந்தபுரம்: பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர், அமைச்சர்களை, 'மாண்புமிகு' என்ற அடைமொழியுடன் அழைக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார். இதற்கிடையே தான் தற்போது கேரளாவில் முதல்வர், அமைச்சர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது இல்லை மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பெயர் சொல்லி அழைக்கும்போதும் மரியாதை குறைவாகவும், பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு பதிலளிக்கும் கடிதங்கள் எழுதும்போது பெயருக்கு முன்னால் உரிய மரியாதைக்கான சொல் இடம்பெறுவது இல்லை என்ற புகார்கள் எழுந்தன. இதற்கு தீர்வு காண முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்தார்.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில நிர்வாக சீர்திருத்தத்துறையின் சார்பில் கடந்த மாதம் 30ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மற்றும் அலுவலக தலைமை அதிகாரிகளுக்கு சுற்றிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியதாவது; பொதுமக்களிடம் இருந்து வரும் அரசு தொடர்பான புகார்கள் மற்றும் மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெயர் முன், 'மாண்புமிகு' என்ற வார்த்தையை சேர்த்து பதில் அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மாத இறுதியில் பிறப்பித்தாலும் கூட இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்து கேரளாவில் பேசும்பொருளாகி உள்ளது.