ரூ.4.05 கோடி மதிப்பிலான 45 புதிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!
சென்னை: ரூ.4.05 கோடி மதிப்பிலான 45 புதிய வாகனங்களை மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 புதிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம், தாய்-சேய் சுகாதார சேவைகள், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தொற்று அல்லாத நோய் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு தரமான மற்றும் பயனுள்ள பொது சுகாதார சேவைகளை வழங்குவதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளையும் பொருத்தமான திட்டமிடல், திறம்பட செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் மூலம் மாவட்டங்களில் சுகாதார இலக்குகளை அடைவதில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர். மாவட்ட சுகாதார அலுவலர்கள் நோய் கண்காணிப்பு பணிகள், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வு, வட்டார அளவிலான ஆய்வு கூட்டம் மற்றும் இதர கள ஆய்வு போன்ற பணிகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாகனம் இன்றியமையாததாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு சுகாதார திட்ட நிதியின் கீழ் 4 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 புதிய வாகனங்களின் சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் மரு.சு.வினீத், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் மரு. எ. சோமசுந்தரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
