உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தலைமை நீதிபதியிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தலைமை நீதிபதியிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் உள்ளார். இன்று அவர் முன்பு மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் உள்ள விஷ்ணு சிலையை சீரமைக்கக் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின் போது நீதிபதி கவாய், கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர், நீதிமன்ற அவையிலேயே கவாய் மீது காலணி ஒன்றை வீச முயன்றுள்ளார். இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில்:
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஜி அவர்களிடம் பேசினேன். இன்று முன்னதாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது நீதியின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என கூறியுள்ளார்.