சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையின் நவ துவாரங்களில் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: தீட்சிதர்கள் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
சென்னை:சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள், கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்யும்படி தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
கால பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மேற்கு நுழைவாயில் வழியாக பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, கனகசபையின் உள்ள நவ துவாரங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து, மேற்கு புறத்தில் துவாரம் இருந்ததா என சரிபார்த்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.