Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

சிதம்பரம்: கடலூரில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்குள் சைவ ஆலயமான நடராஜர் சன்னதியும், வைணவ ஆலயமான தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம். 108 திவ்ய பிரதேசங்களில் 41வது திவ்ய பிரதேசமாக திகழும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் திகழ்கிறது.

கிழக்கு நோக்கி ராஜ கோபுரத்துடன் கூடிய தனி கோயிலாக அமைந்துள்ள இவ்வாலயத்தில் புண்டரீகவள்ளி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, பலிபீடம், கொடிமரம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் அமைந்துள்ளது. தில்லை திருச்சத்திரக்கூடம் என்றழைக்கப்படும் இக்கோவிலில் மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்திலும், உற்சவரான தேவாதி தேவன் அமர்ந்த நிலையிலும் அருள் பாலித்து வருகின்றனர்.

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பின் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக ஆயிரம் கால் மண்டபம் முன்பு உள்ள நடன பந்தலில் கடந்த 30ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று 8 வது கால பூஜை முடிவடைந்து பூர்ணாகதியுடன் மகாதீப ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இரண்டு டி.எஸ்.பி மேற்பார்வையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர். அதே போன்று நடராஜர் கோவில் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் பேருந்துகள் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு மாற்று பாதைகளில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.