சிதம்பரம் அருகே அடிக்கடி விபத்து நடக்கும் மணலூர் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை தடுப்பு கட்டை அமைக்க வேண்டும்
*வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சிதம்பரம் : சிதம்பரம் அருகே அடிக்கடி விபத்து நடக்கும் மணலூர் பேருந்து நிறுத்தத்தில் வேகத்தடை, தடுப்பு கட்டை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து புவனகிரி வழியாக வடலூர், பண்ருட்டி, கடலூர், புதுச்சேரி, சென்னை செல்லும் பிரதான சாலையில் லால்புரம் பேருந்து நிறுத்தம் அருகே, அம்மன் கோயில் தெரு, தையாக்குப்பம், பாலுத்தாங்கரை, கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலை செல்கிறது.
இந்த சாலை அருகே தனியார் பள்ளி உள்ளது. இதில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகப் பணிக்கு செல்பவர்கள், அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள் உட்பட பலதரப்பினரும் டூவீலர், கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் அருகே புவனகிரி வழியாக கடலூர் செல்லும் சாலையில், மணலூர் பேருந்து நிறுத்தம் அருகே கிராம பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலை நடுப்பகுதியில் வேகத்தடை, தடுப்புகட்டை இல்லாமல் சிறிது தூரம் தள்ளி அமைத்துள்ளனர்.
இதனால் தனியார் பள்ளி செல்லும் வாகனங்களும், கிராமப் பகுதிக்கு செல்லும் மினி பேருந்து, டிராக்டர், டெம்போ உள்ளிட்ட வாகனங்களும் செல்லும்போது, புவனகிரி வழியாக சிதம்பரம் வரும் வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக டூவீலரில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வயல்வெளிக்கு உரம் மற்றும் இடு பொருட்களை இவ்வழியாக கொண்டு செல்லும்போதும் மிகவும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே தடுப்புக்கட்டை இல்லாததால், நடந்து செல்லும் பொதுமக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பாக இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நலன் கருதி இந்த சாலை பிரிந்து செல்லும் வழியில் நடுப்பகுதியில் ரிப்ளை லைட் பொருத்த வேண்டும். விபத்துகளை தடுக்க தடுப்பு கட்டை அமைத்துக்கொடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து மணலூர் பகுதியை சேர்ந்த லாவண்யா சேகர் கூறுகையில், லால்புரம், மணலூர் பகுதியில் எப்போதும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலையில் அலுவலகப் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் இச்சாலையில் பயணித்து வருகின்றனர்.
இதில் மணலூர் மற்றும் அருகேயுள்ள கிராம பகுதிக்கு செல்லும் சாலை அமைந்திருப்பதால், இச்சாலையை கிராஸ் செய்து செல்லும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இவற்றை தடுப்பதற்கு தடுப்பு கட்டை, வேகத்தடை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.