கூரையேறி கோழி பிடிக்க முடியாத விஜய் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவாராம்: அமைச்சர் கோவி.செழியன் தாக்கு
ஒரத்தநாடு: கூரையேறி கோழி பிடிக்க முடியாத விஜய், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவாராம் என அமைச்சர் கோவி.செழியன் தாக்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நடுவூர் கிராமத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.170.22 கோடி மதிப்பில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நெல்லை பாதுகாப்பான முறையில் பாதுகாத்து ஆலைகளுக்கு அனுப்பக்கூடிய அரிய திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலாக அரசு வழங்கியுள்ளது. தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத தவெக தலைவர் விஜய், பாண்டிச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது கூரையேறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பது போல உள்ளது. முதலில் அவர் தேர்தலில் நிற்கட்டும், பின்னர் சில, சில இடங்களில் வெற்றி பெறட்டும். அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும், அதன் பிறகு பாண்டிச்சேரி போகட்டும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய். இவ்வாறு அவர் கூறினார்.


