சுக்மா: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.6 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட மூத்த நக்சல் மல்லோஜேூலா வேணுகோபால் என்கிற பூபதி மற்றும் 60 நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர். இந்நிலையில் சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தாரில் 27 நக்சல்கள் மூத்த காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்த 27 பேரில் பத்து பேர் பெண்கள். மக்கள் விடுதலை கொரில்லா ராணுவ பட்டாலியன் எண் ஒன்றின் உறுப்பினரான ஓயம் லக்முவின் தலைக்கு போலீசார் ரூ.10லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து கான்கர் மாவட்டத்தில் 32 பெண் நக்சல்கள் உட்பட மொத்தம் 50 நக்சல்கள் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் மாவோயிஸ்ட்டுகளின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழுவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் அடங்குவார்கள். அடுத்தடுத்து 2 நாட்களில் மட்டும் 139 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களிடம் இருந்து ஏழு ஏகே ரக துப்பாக்கிகள், 4 ரைபிள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 மாவட்டங்களில் மட்டுமே நக்சல் பாதிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையானது ஆறில் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.