ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ஏஐ மூலம் 36 மாணவிகளின் ஆபாச படங்களை உருவாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். சட்டீஸ்கர் மாநிலம், நவா ராய்ப்பூரில் சியாமா பிரசாத் முகர்ஜி சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருபவர் சையது ரஹீம் அட்னன் அலி(21). இவர் அங்கு படித்து வரும் 36 மாணவிகளின் படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து உருவாக்கியுள்ளார். இது பற்றி தகவல் தொழில்நுட்ப கல்லூரியின் பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் ராக்கி போலீசார் தொழில்நுட்ப கல்லூரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து சையது ரஹீம் கைது செய்யப்பட்டார்.
இது பற்றி, நவா ராய்ப்பூர் கூடுதல் எஸ்பி விவேக் சுக்லா, ‘‘மாணவர் சையது ரஹீம் தொழில் நுட்ப கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி உள்ளார். அவர் செயற்கை நுண்ணறிவு மூலம் 36 மாணவிகளின் போட்டோக்களை ஆட்சேபகரமாக உருவாக்கியுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சையது ரஹீமிடம் விசாரணை நடத்தியது. அது உண்மை என தெரிந்ததும் சையது ரஹீமை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதை தொடர்ந்து சையது ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் ஆபாச படங்களை ஆன்லைனில் உலவ விட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றார்.