Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்தீஸ்கரில் காணாமல்போன 18 மாத குழந்தை கும்பகோணத்தில் மீட்பு: கடத்தியவர் சொன்ன காரணம்

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்கு பின்னர் கும்பகோணத்தில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை பிடித்திருந்ததால் தூக்கி வந்துவிட்டதாக கடத்திய நபர் கூறியது தான் காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சேர்ந்தவர் சோனு மாணிக்புரி. இவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வந்துள்ளார். அன்று இரவு 10 மணி அளவில் ரயில் நிலையம் முன்பதிவு அலுவலகத்தின் முன் அனைவரும் படுத்து உறங்கி உள்ளனர்.

மறுநாள் அதாவது ஜூலை 27ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது சோனு மாணிக்புரின் 18 மாத குழந்தையான கார்த்திக் காணாம போய் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களில் குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் குழந்தையை தேடியும் கிடைக்காததால் அவர்கள் துர்க் ஜிஆர்பி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் கடத்தல் வழக்கு பதிவு செய்து துர்க் ஜிஆர்பி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சுமார் 45 வயது உடைய ஆண் ஒருவர் குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை வைத்து விசாரித்த போது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சாத்தனுரை சேர்ந்தவர் அவர் என தெரியவந்தது. கடத்திய நபரை பிடிக்க துர்க் ஜிஆர்பி காவல் நிலைய உதவிய துணை ஆய்வாளர் ஜனக்லால் திவாரி, மயிலாடுதுறை ஆர்பிஎப் ஆய்வாளர் சுகுமாரிடம் உதவி கோரியுள்ளார். இதனையடுத்து அவரது உத்தரவின் பெயரில் தலைமை காவலர் இளையராஜா, அம்மாநில போலீசாருக்கு கடத்தல் நபரை பிடிக்க உதவியுள்ளார்.

கடத்தலில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, சாத்தனுர் கிராமம் சந்திரன் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் 45 வயதான ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கரில் இருந்து வந்திருந்த சோனு மாணிக்புரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை கடத்தியது தொடர்பாக விசாரித்த போது குழந்தையை பிடித்திருந்ததால் தூக்கி வந்து விட்டதாக ஆறுமுகம் கூறியது அதனை கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.