பனாஜி: செஸ் உலகக் கோப்பை காலிறுதி டைபிரேக்கரில் சீன கிராண்ட் மாஸ்டர் வெ யியிடம் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி தோல்வியை தழுவினார். செஸ் உலகக் கோப்பை போட்டிகள் கோவாவின் பனாஜி நகரில் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோர் லீக் சுற்றுகளில் தோல்வியடைந்து வெளியேறினர். மாறாக, இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார். எரிகைசி, சீன வீரர் வெ யி இடையிலான முதல் மற்றும் 2வது சுற்று போட்டிகள் கடந்த 17, 18 தேதிகளில் நடந்தன. இரு போட்டிகளும் டிராவில் முடிந்ததால், டைபிரேக்கர் போட்டி, நேற்று நடந்தது. டைபிரேக்கரின் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் எரிகைசி ஆடினார். அப்போட்டி டிராவில் முடிந்தது. அதன் பின் நடந்த 2வது போட்டியில் எரிகைசி வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். அப்போட்டியில் எரிகைசி சில தவறுகளை செய்ததால் அதை பயன்படுத்திக் கொண்ட வெ யி வெற்றி வாகை சூடினார். அதையடுத்து, போட்டியில் இருந்து எரிகைசி வெளியேறினார்.
+
Advertisement


