பனாஜி: செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி - சீனாவின் வெ யி இடையிலான காலிறுதி ஆட்டம் டிராவில் முடிந்தது. கோவாவில் ஃபிடே செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தோல்விகளை தழுவி வெளியேறிய நிலையில் அர்ஜுன் எரிகைசி மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில் எரிகைசி- சீன கிராண்ட் மாஸ்டர் வெ யி இடையிலான காலிறுதி போட்டிகளின் முதல் ஆட்டம் கோவாவில் நேற்று நடந்தது.
இரு வீரர்களும் சாதுரியமாக காய்களை நகர்த்தி வெற்றி பெறும் நோக்கில் செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மங்கியதால் 59 நிமிடங்களுக்கு பின்னர் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். நேற்றைய போட்டியில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய அர்ஜுன் எரிகைசி, 99.5 சதவீத நகர்த்தல்களை துல்லியமாக, தவறுகளின்றி அரங்கேற்றினார். அதேபோல், சீன வீரர் வெ யி, 99 சதவீதம் தவறுகளின்றி காய்களை நகர்த்தியதால் யாரும் வெல்ல முடியாமல் போனது. இதையடுத்து, இவர்கள் இடையிலான அடுத்த போட்டி இன்று நடக்கவுள்ளது. இன்றைய போட்டியும் டிரா ஆனால், நாளை, டைபிரேக்கர் போட்டி நடத்தப்படும்.


