ரூ.3.69 லட்சம் கோடி செஸ் வரியை உரிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை : சிஏஜி அறிக்கையில் முறைகேடு அம்பலம்
டெல்லி: 2023 - 2024ம் ஆண்டு நிலவரப்படி செஸ் வரி மூலம் ஒன்றிய அரசு வசூலித்த ரூ.3.69 லட்சம் கோடி நிதி கல்வி போன்ற முக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை என்று ஒன்றிய கணக்கு தணிக்கை துறையான சிஏஜி தெரிவித்துள்ளது. 2023-24ம் நிதியாண்டுக்கான ஒன்றிய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமான வரிகளுடன் கூடுதலாக குறிப்பிட்ட சதவிகித தொகை கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, எண்ணெய் துறை மேம்பாடு போன்ற துறைகளின் மேம்பாட்டிற்காக செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், பல ஆண்டுகளாக செஸ் வரி தொகையானது முறையாக பயன்படுத்தவில்லை என சிஏஜி தெரிவித்துள்ளது. 2024ம் வரை ரூ.3.69 லட்சம் கோடி செஸ் வரி வசூல் செய்யப்பட்டதாகவும் ஆனால், சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வசூலிக்கப்பட்ட செஸ் தொகையும் அதற்காக ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எண்ணெய் தொழில் மேம்பாட்டு வாரியத்தின் வளர்ச்சிக்காக சட்டம் 1974-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது செஸ் விதிக்கப்பட்டது. 2023-24 நிதி ஆண்டு வரை கச்சா எண்ணெய் மீதான மொத்த செஸ் வரி வசூல் ரூ.2,94,850 கோடியாகும். ஆனால், எண்ணெய் தொழில் மேம்பாட்டு வாரியத்திற்கு 902.40 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்படும் செஸ் தொகையில் இருந்து வாரியத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதாவது, செஸ் வரியாக அரசு ரூ.2.9 லட்சம் கோடியை வசூலித்துவிட்டு, வெறும் ரூ.902 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது.