Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆப் சீசனை வரவேற்க பூத்துக் குலுங்குகிறது; மலைகளின் இளவரசிக்கு அழகு சேர்க்கும் செர்ரி மலர்கள்; கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலுக்கு அழகு சேர்க்கவும், ஆப் சீசனை வரவேற்கும் வகையிலும் மலைப்பகுதிகளில் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சீசன் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் களைகட்டும். நகரில் மோயர் பாயிண்ட், தூண் பாறை, நட்சத்திர ஏரி, பேரிஜம் ஏரிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் உள்ளன. ஆகஸ்ட் முதல் செப்டெம்பர் வரை ஆப் சீசன் என்றும், இரண்டாவது சீசன் என்றும் அழைப்பர். இந்த சீசனை வரவேற்கும் வகையில், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்களின் மரங்களில் இலைகள் இருக்காது; பூக்கள் மட்டுமே பூக்கும். அழகிய ரோஸ் நிறத்தில் காணப்படும் இந்த மலர்கள் காண்போரை கவரும்.

இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகான்ட், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம், மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங் கோயில் நகரங்களான கல்பா, சரகான், சிடகுள் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இந்த மலர்கள் பூத்துக் குலுங்கும். ஹிந்தியில் இந்தப் பூவை பத்மஹஸ்தா என அழைக்கின்றனர். ஜப்பான் நாட்டி செர்ரி பூக்கள் பூக்கும் நாட்களில் விழா எடுத்து கொண்டாடுகின்றனர். கொடைக்கானலில் செர்ரி மரங்களை ரப்பர் மரங்கள் என அழைக்கின்றனர். ‘ரோசாசியா’ என்ற தாவரக்குடும்பத்தை சேர்ந்த இந்த பூக்களை கொடைக்கானலில் அதிகளவில் நட்டு வளர்க்க வேண்டும். செர்ரி பூக்கள் மலரும் மாதத்தை மலர்களின் மாதமாக கொண்டாட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.