Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேப்பாக்கத்தில் கொல்கத்தாவுடன் இன்று மோதல்: தல தோனி கேப்டன்ஷிப்பில் வெற்றிப்பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு நடைபெறும் 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன்தற்போது 9வது இடத்தில் உள்ளது. இதனால் சிஎஸ்கே மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மீண்டும் டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். சீசனின் நடுவே மிகப்பெரிய பொறுப்பு டோனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் முன் முன் எக்கச்சக்க சவால்கள் இருக்கின்றன.

இனி வரும் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் விலகியிருப்பதால் இன்றைய போட்டியில் நம்பர் 3 வீரர் யார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. துபேவை நம்பர் 3ல் விளையாட வைத்துவிட்டு, ராகுல் திரிபாதியை டோனி களமிறக்குவாரா அல்லது வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத் போன்ற இளம் பேட்டர் ஒருவரை அணிக்குள் கொண்டுவருவாரா என்பது கேள்வியாக உள்ளது. தற்போதைய சூழலில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, நூர் அமகது, பதிரானா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களே டீமில் இருக்கும்போது, சாம்கரன், ஓவர்டனை சேர்க்க முடியாது. எனவே மிடில் ஆர்டர் பலவீனத்தை போக்க அஸ்வினை நீக்கிவிட்டு தீபக் ஹூடா மீண்டும் உள்ளே கொண்டுவரப்படலாம்.

அன்ஷூல் கம்போஜ் அணிக்குள் வரவும் வாய்ப்புள்ளது. டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கேகேஆர் அணியை பொறுத்தமட்டில் கேப்டன் ரஹானே, வெங்கடேஷ் அய்யர், ரகுவன்ஷி, ரிங்கு சிங் நல்ல பார்மில் உள்ளனர். சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்சல் போதிய பங்களிப்பு அளித்தால் அந்த அணி மேலும் வலுவடையும். பந்துவீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தங்களுக்குரிய நாளாக அமைந்தால் மிரட்டிவிடுவார்கள். மொத்தத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், 3-வது வெற்றியை குறி வைத்து கொல்கத்தாவும் வரிந்து கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல்பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.