சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருணுடன் கடலோர பாதுகாப்பு ஐஜி சந்திப்பு: கடல் மார்க்கமாக போதை பொருள் கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை
சென்னை: கடலோர பாதுகாப்பு மண்டல ஐஜி டானி மைக்கேல், சென்னை போலீஸ் கமிஷனர் அருணை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது கடல் மார்க்கமாக போதை பொருள் தடுப்பது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, கடல் வழியாக போதை பொருட்கள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை கடத்துதல், திருவொற்றியூர் முதல் நீலாங்கரைக்கு இடையேயான சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பு மற்றும் உளவுத்தகவல்களை பகிர்வதில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் கடலோர பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பொருட்களை கடத்தலை தடுப்பது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி கலந்துரையாடுவதற்கும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளை வகுப்பதற்கும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த ஆலோசனைக்கு பிறகு ஐஜி டானி மைக்கேல், போலீஸ் கமிஷனர் அருணுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.