‘சென்னை ஒன்’ செயலி மூலம் மாதாந்திர டிஜிட்டல் பாஸ் இம்மாத இறுதியில் அறிமுகம்: ஒட்டுநர்கள் - நடத்துனர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
* கோல்டு, டைமண்ட் வகைகளில் ஆன்லைன் பேருந்து அட்டை
சென்னை: ‘சென்னை ஒன்’ செயலி மூலமாக மாதாந்திர டிஜிட்டல் பேருந்து அட்டை இம்மாதம் இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் ஒட்டுநர்கள் - நடத்துனர்கள், போக்குவரத்து அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கும்டா வெளியிட்டுள்ளது. சென்னையில் பொது போக்குவரத்து சேவையை பொறுத்தவரை மாநகர பேருந்துகளின் பணி முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களுக்கு செல்ல தினசரி பிரதான ஒன்றாக பேருந்து சேவை பொதுமக்களுக்காக இயங்கி வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக தான் மின்சார ரயில், மெட்ரோ போன்றவை உள்ளன. சென்னை மாநகரில் மொத்தம் 2,421 கி.மீ. நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி 600க்கும் மேற்பட்ட வழிதடங்களில் 5,608 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், போக்குவரத்து சேவைகளை நவீன மயமாக்கல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பாக உருவாக்கப்பட்ட கும்டா என்ற போக்குவரத்து குழுமம் வாயிலாக அண்மையில் ‘சென்னை ஒன்’ என்ற செயலியை புதிதாக கடந்த செப்.22ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த செயலி வாயிலாக மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை கியூ ஆர் கோர்டு வழியாக பெறலாம். இந்த மூன்று சேவைகளுக்கும் சேர்த்து அல்லது தனித் தனியாகவும் மக்கள் இந்த செயலியில் டிக்கெட் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. சென்னை ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்ட 30 நாட்களில் மட்டும் 4.58 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டன. அதேபோல், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்த செயலி மூலம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் பேர் டிக்கெட் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதனால் ரூ.73 லட்சம் வருவாய் ஈடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை ஒன் செயலியில், மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர பயணச்சீட்டு பெறும் வசதியை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் பேருந்து அட்டை இம்மாதம் இறுதியில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக ஒட்டுநர்கள், நடத்துனர்கள், போக்குவரத்து அலுவலர்களுக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) விரிவான செயல்முறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கும்டா அதிகாரிகள் கூறியதாவது: ‘சென்னை மாநகர பேருந்துகளுக்கான மாதாந்திர பாஸ்களை பெரும் வசதி விரைவில் ‘சென்னை ஒன்’ செயலில் வரவுள்ளன’.
அதன்படி, கோல்ட் வகையான பேருந்து அட்டை ரூ.1000, டைமண்ட் வகையான பேருந்து அட்டை ரூ.2 ஆயிரத்திற்கான விலையில் வழங்கப்படும். இதனால் பயணிகள் தங்களின் பேருந்து அட்டைகளை எளிமையாக பயன்படுத்த முடியும். இந்த அட்டைகளின் காலமும் தளர்த்தப்பட்டுள்ளதால் வாங்கிய நாட்கள் முதல் அடுத்த 30 நாட்களுக்கு அதனை பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய முறையில் சேவை
* பேருந்தில் பயணி ஏறியதும் அவருடைய செல்போனில் உள்ள ‘சென்னை ஒன்’ செயலியில் டிஜிட்டல் பாஸை நடத்துனரிடம் காண்பித்து ஸ்கேன் செய்து கொள்ளவும்; அதனை நடத்துனரும் சரிபார்ப்பார்.
* கோல்ட் பாஸ் வைத்திருப்பவர்கள் ஏசி அல்லாத பேருந்துகளை பயன்படுத்த முடியும்.
* டைமன் பாஸ் வைத்திருப்பவர்கள் ஏசி உட்பட அனைத்து விதமான பேருந்துகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
புதிய அம்சங்கள்
* பயணிகளிடம் கியூ ஆர் கோடு மூலமாகவோ அல்லது ஓடிபி மூலமாகவோ ஏறுதல் மற்றும் இறங்குதல் பதிவு செய்யப்படும்.
* Animated Security Markers மூலம் பாஸ்கள் அனைத்தும் உண்மையானதா என உறுதி செய்யப்படும்.
* இந்த செயலி மூலம் டிஜிட்டல் முறையை துரிதப்படுத்துவது காரணமாக பரிசோதனை முறைகள் மேம்படுத்தப்படும்.


