இந்தியாவில் முதன்முறையாக பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், கார், ஆட்டோ என ஒரே பயணச்சீட்டில் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்: சென்னை ஒன்று செல்போன் செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே பயணச்சீட்டில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், கார், ஆட்டோ ஆகிய வாகனங்களில் பயணம் செய்யும் வகையில் ‘சென்னை ஒன்று’ என்ற செல்போன் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2வது ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகர பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை பெருநகர பகுதிக்கான (5,904 சதுர கி.மீ) விரிவான போக்குவரத்து திட்டம் 2023-2048, ‘‘மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்” என்ற தொலைநோக்கு பார்வையுடன், நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்ல இது வழிவகுக்கும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலியை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த செயலி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப் / ஆட்டோக்களை ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணச்சீட்டின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சென்னை ஒன்று செயலி’ பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம். முதல்வர் நேற்று தொடங்கி வைத்தாலும் பேருந்து, ரயில், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தில் வருகிற 1ம் தேதி முதல் பொதுமக்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.