அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(40). சென்னை அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பரிமளா. மகன்கள் மோகித்ராஜ், பிரதீப்ராஜ். இந்நிலையில், ரமேஷ்குடும்பத்தினருடன் அரிகிலப்பாடி அடுத்த பாளையக்கார கண்டிகை பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அங்கிருந்து பொய்பாக்கம் கல்லாறு அருகே உள்ள தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு ரமேஷ் மகன் மோகித்ராஜூக்கு நீச்சல் பழக கற்றுக்கொடுத்தார். அப்போது, திடீரென்று வெள்ளத்தில் மகனை மீட்க முயன்றார். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் மோகித்ராஜை பாதுகாப்பாக மீட்டனர். ஆனால், ரமேஷ் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.
நேற்று காலை தக்கோலம் அடுத்த பங்காரு நாயுடு கண்டிகை பகுதியில் ரமேஷின் சடலம் ஒதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரணியில் மாணவன் பலி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி(56), கோணிப்பை வியாபாரி. இவரது மனைவி சித்ரா. தங்கையின் மகன்களான அருண்ராஜ்(20), சுனில்ராஜ்(11) ஆகியோரை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். சித்ரா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 6ம் வகுப்பு படித்து வந்த சுனில்ராஜ், நேற்று முன்தினம் நண்பர்களுடன் விஏகே நகர் பகுதியில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். அங்கு ஆற்றில் குளித்தபோது, சுனில்ராஜ் நீரில் மூழ்கி இறந்தான்.

