சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு
சென்னை: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்கு அனுமதி. தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.186.94 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 14.08.2025 அன்று நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு நிதித்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவது குறித்த அறிவிப்பின் விவரம்
"தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்".
பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு. மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான செயற்குறிப்பினை அரசிற்கு அனுப்பியுள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தினை செயல்படுத்திட உணவளிப்பு நிறுவனத்தை (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோருவதற்கு முன்மொழிந்துள்ளர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சியின் 29,455 எண்ணிக்கையிலான தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கு சிற்றுண்டி தாங்கிப்பட்டி (Tiffin Carrier) கொள்முதல் செய்வதற்கும், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகர் பெருநகர சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்வதற்கும் ஆகும் செலவினம் பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அனுமதி எதிர்நோக்கி பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான உணவளிப்பு நிறுவனத்தைத் (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கான செலவினத் தொகை ரூ.186,94,22,969/-க்கு அரசின் நிர்வாக அனுமதியினை கோரியுள்ளார். மேலும், இப்பணிக்கான செலவினத் தொகையினை அரசு. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அளிக்கும் ஆறாவது மாநில நிதி ஆணைய மானிய நிதியிலிருந்து பெறுவதற்கான அனுமதியையும் கோரியுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் செயற்குறிப்பினை அரசு கவனமான பரிசீலனைக்குப் பின்னர் ஏற்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான உணவளிப்பு நிறுவனத்தை (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கு ரூ.186,94,22,969/ மதிப்பீட்டில் ஆறாவது மாநில நிதி ஆணைய மானிய நிதியிலிருந்து மேற்கொள்ள மன்றத்தின் பின்னேற்பு அனுமதி எதிர்நோக்கி அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு இவ்வாணையின் இணைப்பில் உள்ள பொதுவான வழிகாட்டுதல்களை நிர்ணயம் செய்தும் அவற்றைத் தவறாமல் பின்பற்றுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உறுதி செய்யுமாறும் அரசு ஆணையிடுகிறது.
* தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான பொதுவான வழிகாட்டுதல்கள் வெளியீடு
பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்காக உணவளிப்பு நிறுவனம் (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கான ஒப்பந்தக் காலம் இந்தத் திட்டத்திற்கு மூன்று (3) ஆண்டுகள் ஆகும்.
ஒவ்வொரு முறைமாற்றுப் பணிக்கும் (Shift). மண்டல வாரியாக, தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் உணவு பரிமாறும் இடங்களின் எண்ணிக்கையின்படி குறிப்பிடப்பட்ட சேவை நேரத்திற்குள் உணவு அளிக்கப்பட வேண்டும்.
அனைத்து உணவுகளும் FSSAI-சான்றளிக்கப்பட்ட சமையலறைகளில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். இது சட்டப்பூர்வ உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்படும் உணவளிப்பு நிறுவனம் (Catering Agency) நியமிக்கப்பட்ட இடங்களில் தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்தல், சிற்றுண்டி தாங்கிப்பட்டியில் (Tiffin Carrier) உணவு கட்டுதல் (Packing) மற்றும் விநியோகித்தல் (Distribution) ஆகியவற்றிற்கு பொறுப்பாவார்கள்.
உணவு போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் தினசரி அடிப்படையில் நன்கு கழுவி, கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட வேண்டும். வாகனங்கள் எல்லா நேரங்களிலும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதையும், மாசுபாடு அபாயங்கள் இல்லாமல் இருப்பதையும், பொருந்தக்கூடிய FSSAI மற்றும் சட்டப்பூர்வ விதிமுறைகளுக்கு இணங்க பாதுகாப்பான உணவுப் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருப்பதையும் உறுதி செய்வது தேர்ந்தெடுக்கப்படும் உணவளிப்பு நிறுவனத்தின் (Catering Agency) பொறுப்பாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உணவளிப்பு நிறுவனத்திற்கு தேவையான அனைத்து சட்டப்பூர்வ ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களைப் பெறுவதற்கும். செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு அத்தகைய சமையலறைகளுக்கு செல்லுபடியாகும் FSSAI சான்றிதழைப் பெற்று இருக்க வேண்டும். நியமிக்கப்பட்ட இடங்களில் ஆணை (Order) செய்யப்பட்ட அளவு உணவுகள் கொடுக்கப்பட்டவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவளிப்பு நிறுவனம் ஒப்புதலைப் பெற வேண்டும் விநியோகத்திற்கான சான்றாக பரிந்துரைக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் செல்பேசி செயலியில் (Mobile App) விவரங்களை பதிவேற்ற வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியால் நியமிக்கப்படும் ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகர் (PMC) மூலம் சமையலறைகள், மூலப்பொருட்கள். பயன்படுத்தப்படும் நுகர்பொருட்கள், வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பரிமாறப்படும் உணவின் அளவு ஆகியவற்றை அவ்வப்போது தணிக்கை செய்யப்பட வேண்டும்