Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்படும்: பிளாசா பயணிகள் ஓய்வுக்கூடம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்; 2023ம் ஆண்டு பணிகள் தொடங்கியது; 2026 ஜனவரியில் திறக்க வாய்ப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பிளாசா பயணிகள் ஓய்வு கூடம் அமைக்கும் பணி 2023ம் ஆண்டு தொடங்கியது. 2024ம் ஆண்டு அக்டோபரில் பயன்பாட்டிற்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால் வரும் டிசம்பர் அல்லது 2026 ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து, அதிக விரைவில் பிளாசா பயணிகள் ஓய்வு கூடம் செயல்பாட்டிற்கு வர இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றுக்கு வரும் பயணிகள் பிக்அப் பாயிண்டிற்கு நீண்ட தூரம் சென்று, மல்டி லெவல் கார் பார்க்கிங்கிலிருந்து வாகனத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. பயணிகள் வருகை டெர்மினல் பகுதியில் இருந்து, மல்டிலெவல் கார் பார்க்கிங் செல்வதற்கு, இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அந்த வாகனங்கள் குறைவாக இருப்பதோடு, இரவு நேரங்களில் அந்த வாகனங்கள் சரிவர இயக்கப்படாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதேபோல், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை வைப்பதற்கு பொருட்கள் பாதுகாப்பு அறை இருந்தது. ஆனால் சென்னை விமான நிலையத்திற்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, அந்த பொருட்கள் பாதுகாப்பு அறை மூடப்பட்டு விட்டது. இதனால் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு வசதி இல்லாமல் இருப்பதோடு, தங்கள் உடைமைகளை தூக்கி சுமந்து கொண்டு அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் டெர்மினல் ஒன்றுக்கு எதிர்புறத்தில் பயணிகள் வசதிக்காக, பிளாசா என்ற பயணிகள் ஓய்வு எடுக்கும் பகுதியை உருவாக்க முடிவு செய்தது. அதன்படி தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் அந்த பொறுப்பு கடந்த 2023ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. 2024ம் ஆண்டு அக்டோபரில் பணிகள் முடிவடைந்து, பயணிகளின் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்று கூறப்பட்டது.

பிளாசா பயணிகள் ஓய்வு கூடத்தில், பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. குறிப்பாக பயணிகள் தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பாக வைத்து விட்டு, குறிப்பிட்ட சிறிது நேரம், வெளியே சென்று வருவதற்கு வசதியாக, பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணிகள் ஓய்வாக அமர்ந்து இருப்பதற்கு வசதியாக இருக்கைகள், செல்போன் சார்ஜிங் பாய்ண்டுகள், சிற்றுண்டிகள், டீ, காபி, குளிர் பானங்கள் அருந்துவதற்கான சிறு உணவகங்கள், பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ரெஸ்ட் ரூம் உள்ளிட்டவைகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பயணிகள் ஓய்வு கூடம் அருகே, ஒரு பிக்அப் பாயிண்ட் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அந்த பிக்அப் பாய்ண்டில் ஒயிட் போர்டுடன் கூடிய சொந்த வாகனங்கள் மட்டும் பயணிகளை பிக்அப் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் வாடகை வாகனங்களில், செல்பவர்கள் வழக்கம்போல், மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் சென்று, வாகனங்களில் ஏற வேண்டும். ஆனால் அந்த பயணிகளுக்கு, பிளாசா பகுதியில் இருந்து, மல்டி லெவல் கார் பார்க்கிங் செல்வதற்கு, இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதுபோன்ற பல்வேறு வசதிகளுடன் பயணிகளுக்காக அமைய இருக்கும் பிளாசா ஓய்வுக்கூடம், செயல்பாட்டுக்கு வந்து விட்டால் தங்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும். தங்களுடைய பிரச்னைகளும் குறையும் என்று பயணிகளும், ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் 2024 அக்டோபரில் முடிய வேண்டிய பணிகள், அப்போது சுமார் 30 சதவீதம் கூட முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டு அக்டோபரில் செயல்பட்டுக்கு வர வேண்டிய பிளாசா, இந்த 2025ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டது. அதன் பின்பு வருகிற ஆகஸ்ட் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், ஆகஸ்ட் மாதமும் செயல்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இனிமேலாவது பணிகள் சற்று வேகமாக நடந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது வருகிற ஜனவரி மாதத்தில், பிளாசா செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடத்தில், அவர்கள் வசதிகளுக்காக அமைக்கப்பட்டு வரும் பிளாசா என்ற ஓய்வு கூடம் அமைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு கொண்டு இருப்பது ஏன் என்று விசாரித்த போது, அதை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்காமல், தாமதமாக செய்து கொண்டு வருவதால் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் பல ஆயிரம் பயணிகள் வசதிக்காக அமைக்கப்படும் பிளாசா ஓய்வு கூடத்தை விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர, இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்துகின்றனர்.