சென்னை: சென்னை விமான நிலையத்தில் நவீன பிளாசா பயணிகள் ஓய்வுக்கூடம் இந்த மாத இறுதி அல்லது டிசம்பரில் திறக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1, வருகை பயணிகள், பிக்அப் பாயிண்டிற்கு நீண்ட தூரம் சென்று மல்டி லெவல் கார் பார்க்கிங்கிலிருந்து, வாகனங்களில் ஏறி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. பயணிகள் வருகை டெர்மினல் பகுதியில் இருந்து மல்டிலெவல் கார் பார்க்கிங் செல்வதற்கு, இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அந்த வாகனங்கள் குறைவாக இருப்பதோடு, இரவில் சரிவர இயக்கப்படாததால் பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் விமான பயணிகள் வீடுகளுக்கு செல்அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது.
அதுபோல், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்னை விமான நிலையத்தில், பயணிகளின் உடைமைகளை வைப்பதற்கு பொருட்கள் பாதுகாப்பு அறை இருந்தது. ஆனால் சென்னை விமான நிலையத்திற்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி அந்த பயணிகள் பொருட்கள் பாதுகாப்பு அறை மூடப்பட்டு விட்டது. இதனால் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு வசதி இல்லாமல் இருப்பதோடு தங்கள் உடைமைகளை தூக்கி சுமந்து கொண்டு, அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் டெர்மினல் 1 எதிர்ப்புறத்தில் பயணிகள் வசதிக்காக, பிளாசா என்ற பயணிகள் ஓய்வு எடுக்கும் பகுதியை உருவாக்க முடிவு செய்தனர். அதன்படி தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் அந்த பொறுப்பு கடந்த 2023ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. 2024ம் ஆண்டு அக்டோபரில் பணிகள் முடிவடைந்து, பயணிகளின் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்று கூறப்பட்டது.
இந்த பிளாசா பயணிகள் ஓய்வு கூடத்தில், பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. குறிப்பாக பயணிகள் தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பாக வைத்து விட்டு, குறிப்பிட்ட சிறிது நேரம் வெளியே சென்று வருவதற்கு வசதியாக பொருட்கள் பாதுகாப்பு அறைகள், பயணிகள் ஓய்வாக அமர்ந்து இருப்பதற்கு வசதியாக இருக்கைகள், செல்போன் சார்ஜிங் பாய்ண்டுகள், சிற்றுண்டி, டீ, காபி, குளிர் பானங்கள் அருந்துவதற்கான சிறு உணவகங்கள், பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ரெஸ்ட் ரூம் உள்ளிட்டவைகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர பயணிகள் ஓய்வு கூடம் அருகே, பிக்அப் பாயிண்ட் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் 2024 அக்டோபரில் முடிய வேண்டிய பணிகள் அப்போது சுமார் 30 சதவீதம் கூட முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டு அக்டோபரில் செயல்பட்டுக்கு வர வேண்டிய பிளாசா ஓய்வுக்கூடம் 2025 மார்ச் அல்லது ஏப்ரலில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடையாததால், கடந்த ஆகஸ்ட் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால், ஆகஸ்ட் மாதமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் அல்லது வருகிற 2026 ஜனவரி மாதத்தில் இந்த பிளாசா செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்காததே தாமதத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. பிளாசா பயணிகள் ஓய்வு கூடம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, விமான பயணிகள் மல்டி லெவல் கார் பார்க்கிங் சென்று வாகனங்களில் ஏற வேண்டிய நிலை மாறிவிடும். பயணிகள் பிளாசா பகுதியில் இருந்தே, நேரடியாக தங்கள் வாகனங்களில் ஏறி பயணிக்கலாம்.
அதே நேரத்தில், இந்த பிளாசா பயணிகள் ஓய்வு கூடம் செயல்பாட்டிற்கு வந்ததும், முதற்கட்டமாக வெள்ளை போர்டு சொந்த வாகனங்கள் மட்டுமே, பிளாசா பகுதிக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அதன்பின்பு அடுத்த ஓரிரு மாதங்களில், வாடகை கார்கள் உள்பட அனைத்து வகை மஞ்சள் போர்டு வாகனங்களும் இங்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
 
 
 
   