Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி கொக்கைனுடன் சிக்கியவர் இந்தி பட நடிகர்: உறுதிப்படுத்த அதிகாரிகள் மறுப்பு

சென்னை: சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த ஞாயிறு இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை கண்காணித்து 35 வயது ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த அந்த அவர், கம்போடியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி இருந்தார். அவரது, உடைமைகளையும் பரிசோதித்தபோது, மறைத்து வைத்திருந்த 3.5 கிலோ கொக்கைன் போதைப் பொருளை கைப்பற்றினர்.

அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி. தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பயணியை கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இந்த கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள அசாம் மாநிலத்தை சேர்ந்த 35 வயது பயணி சர்வதேச போதை கடத்தும் கும்பலுக்காக போதை பொருளை கடத்தி வந்துள்ளது தெரியவந்தது. அதோடு சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த மும்பை, டெல்லியை சேர்ந்த மேலும் 2 பேர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்தது.

எனவே, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அந்த போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவரையும் அங்கு பிடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டவர், வடகிழக்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகர் என்றும், அவர் ஏற்கனவே ‘ஸ்டுடென்ட் ஆப் இயர் 2’ என்ற இந்தி திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தவர் என்பதும் (அவருடைய பெயர் விஷால் பிரமா) வடமாநிலங்களில் உள்ள ஊடகங்கள், சமூக வலைதளங்கள் பரபரப்பான செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வட்டங்களில் விசாரித்த போது, அவர்கள் அதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.