சென்னை விமானநிலையத்தில் டெர்மினல் விரிவாக்கப் பணிகள் தாமதம்: அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருமா?
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் ரூ.1,207 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய டெர்மினல் விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. இதனால் அப்புதிய டெர்மினல் அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருமா என்று விமானப் பயணிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள், விமானங்களின் எண்ணிக்கை மற்றும் சரக்கு, தனி விமான போக்குவரத்தின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும், அதோடு சரக்கு விமானங்கள், தனி விமானங்கள், போக்குவரத்தும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியாக இருந்தது, நடப்பாண்டில் 3 கோடியை கடந்து சென்றுள்ளன. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவாக்க பணிகளை இந்திய விமானநிலைய ஆணையம் துவங்கியது. முதல்கட்டமாக 1.49 லட்சம் சதுர மீட்டரில் ரூ.1,260 கோடியில் முதல் பேஸ் விரிவாக்கப் பணி மற்றும் ரூ.1,207 கோடியில் 86,315 சதுர மீட்டரில் 2வது பேஸ் கட்டுமானப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. இதில், முதல் பேஸ் கட்டுமானப் பணிகள் பல்வேறு பணிகளால் தாமதமாகி, கடந்த 2023ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி பயணிகளின் பயன்பாட்டுக்கு புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தை துவக்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் முன்னதாக பழைய சர்வதேச முனையமாக செயல்பட்ட டெர்மினல் 3 கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் நடந்தன. அப்பணி நிறைவு பெற்றதும், பேஸ் 2 புதிய டெர்மினலில் ரூ.1,207 கோடி மதிப்பில் 8 நுழைவுவாயில்கள், 60 செக்கிங் கவுண்டர்கள், 10 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், 9 ரிமோட் போர்டிங் கேட் என பல்வேறு அதிநவீன தொழில்நுடப் வசதிகளுடன் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் துவங்கி மந்தகதியில் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெறவேண்டிய இந்த கட்டுமானப் பணிகள் இன்னும் அரைகுறையாகவே உள்ளன.
இதனால், இந்த புதிய டெர்மினல் 2026ம் ஆண்டு, ஜூன் மாதம் பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டது. எனினும், அதன் விரிவாக்க கட்டுமானப் பணிகளில் மந்தநிலை நிலவி காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த 3.5 கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாளும் திறனுடன், 4 டெர்மினல்கள் கொண்ட புதிய டெர்மினல் விமான முனையம் அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருமா என்று விமான பயணிகளிடையே கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விமானநிலைய அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறுவதாகவும் கூறப்படுகிறது.



