சேலம்: ஆத்தூர் அருகே, திருமணம் செய்ய மறுக்கும் காதலன் வீட்டின் முன்பு சென்னை இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் மகள் சௌந்தர்யா (27). பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வேலை பார்க்கும் இடத்தில், ராமநாயக்கன் பாளையம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தினகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், தினகரன், சௌந்தர்யாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன், சௌந்தர்யா ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில், தினகரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக சௌந்தர்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் காதலன் வீட்டின் முன்பு, சௌந்தர்யா நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை தினகரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் காதலன் வீட்டு முன்பே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறினார். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சௌந்தர்யாவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து ஆத்தூர் மகளிர் இன்ஸ்பெக்டர் மலர்கொடி கூறியதாவது: சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில், கடந்த 6 மாதத்துக்கு முன்பே வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மடிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கு மாற்றி வைக்கப் பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்தவுடன், தினகரன் முன்ஜாமீன் பெற்றதாக தெரிகிறது. இதற்கிடையில், தனது வாழ்க்கை பறிபோகுமோ? என, சௌந்தர்யா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அறிவுரை கூறி, மடிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை அணுகுமாறு தெரிவித்துள்ளோம் என்றார்.