Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை மதுரையில் நவ. 28ம் தேதி முதல் உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி

மதுரை: மதுரையில் நவம்பர் 28ல் துவங்கும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப்போட்டிக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய செயற்கையிழை மைதானம் சர்வதேசத் தரத்தில் வேகமாக தயாராகி வருகிறது. இந்தத் தொடரின் ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. மதுரையில் கபடி உள்பட பல்வேறு வகையான தேசிய அளவிலான போட்டிகள் இதுவரை நடந்து வந்தன. சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் தேசிய அளவிலான ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப்போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

இந்த நிலையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டி மதுரையிலும் நடத்தப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். உலகக் கோப்பை ஹாக்கிப்போட்டி நவம்பர் 28ல் சென்னை, மதுரையில் துவங்குகின்றன. இதில், இந்தியா உள்பட 24 நாடுகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டிக்காக தமிழ்நாடு அரசு ரூ.65 கோடி ஒதுக்கியுள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் 31 போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்காக ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏற்கனவே இருந்த ஹாக்கி மைதானத்தில் செயற்கையிழை அகற்றப்பட்டு, சர்வதேசத் தரத்தில் புதிதாக தயாராகி வருகிறது. வீரர்கள் உடைமாற்றும் அறை, குளிர்சாதன வசதியுள்ள அறையில் அமர்ந்து கொண்டு போட்டியை காணும் வசதி, டிஜிட்டல் ஸ்கோர் போர்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அடங்கிய கட்டுமானப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னை, மதுரையில் நவம்பர் 28ல் முதல் போட்டி நடைபெறுகிறது.

‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன என விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை கிளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. லீக் ஆட்டங்கள் சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உள்ளிட்ட 41 போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திலும், 31 போட்டிகள் மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்திலும் நடக்கிறது. மதுரை மாவட்ட ஹாக்கி சங்கத்தலைவர் கண்ணன் கூறுகையில், ‘‘உலக ஹாக்கி தர வரிசையில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதுவரை உலகக் கோப்பை போட்டிகள் 13 முறை நடந்துள்ளன. 14வது முறை நடக்கும் போட்டிகள் மதுரையில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் முழு முயற்சியின் பலனாகவே ஜூனியர் உலகக்கோப்பை போட்டி மதுரையில் நடக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு விளையாட்டு சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வாய்ப்பு மூலம் தென் மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டு மேலும்

சிறப்படையும்’’ என்றார்.

* இம்மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க துணை முதல்வர் உத்தரவு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டிக்காக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்து வரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் ஆய்வு செய்தார். சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதானத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளின் விபரத்தை கேட்டறிந்தார்.

அவரிடம் விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, பணிகள் குறித்து விளக்கினார். ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் நவ.28ல் துவங்க உள்ள நிலையில் அக்டோபர் மாத இறுதிக்குள் பணிகளை முழுமையாக முடித்து திறப்பு விழாவிற்கு தயார்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தினார்.

* எந்தெந்த அணிகள்

போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, கனடா, அயர்லாந்து, ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து, ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா, ‘டி’ பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமிபியா, ‘இ’ பிரிவில் நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ‘எப்’ பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வங்காளதேச அணிகள் இடம் பிடித்துள்ளன.