Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் அக். 27ம் தேதி துவக்கம்: லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, தாட்ஜனா மரியா பங்கேற்பு, தமிழ்நாடு அரசு ரூ. 10 கோடி நிதி உதவி

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் அக்டோபர் 27ல் துவங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உலகத் தரத்திலான சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது . இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த சர்வதேச தரவரிசையைக் கொண்ட இப்போட்டி, வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நடக்கவுள்ளது.

முன்னணி வீரர்கள்:

* லிண்டா ஃப்ருஹ்விர்டோவா (செக் குடியரசு, 20 வயது), கடந்த சீசனின் வெற்றியாளரான இவர், போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறார் .

* தாட்ஜனா மரியா (ஜெர்மனி, இரண்டு குழந்தைகளின் தாய்) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் .

* இவர்களைத் தவிர, 2024 விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியை எட்டியவரும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான டோனா வெக்கிச் (குரோஷியா, உலகத் தரவரிசையில் 69வது இடம்) மற்றும் கடந்த ஆண்டு விம்பிள்டன் காலிறுதியை எட்டிய லுலு சன்*(நியூசிலாந்து) ஆகியோரும் பங்கேற்கின்றனர் .

* செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 19 வயதான நிகோலா பார்டுன்கோவா, ரஷ்யாவின் மரியா டிமோஃபீவா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது, இதற்கான மைதானங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. .இந்தப் போட்டியை சீனாவின் ஷு பென் மேற்பார்வையிடுகிறார் .

இது குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவரும், போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான விஜய் அமிர்தராஜ் தெரிவிக்கையில், ‘‘சென்னையானது, அதன் வளமான டென்னிஸ் பாரம்பரியம் மற்றும் அற்புதமான மைதானத்துடன், நாட்டில் போட்டியை நடத்தச் சிறந்த நகரமாகத் தனித்து நிற்கிறது. இதுபோன்ற ஒரு போட்டி இந்திய டென்னிஸ் வீராங்கனைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் , இது சென்னைக்கு முதலீடு மற்றும் சுற்றுலாவை ஈர்த்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும்’’ என்றார்.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா பேசுகையில், சர்வதேச நிகழ்வுகளை நடத்த தமிழக அரசும் அதன் துறையும் எப்போதும் ஆதரவளித்து வருகின்றன . ஒரு பெரிய சர்வதேச நிகழ்வை நடத்துவதில் உள்ள சவால்களைச் சமாளிக்க மைதான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார். இப்போட்டி யூரோஸ்போர்ட் மற்றும் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும்.