சென்னை : சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண Influenza A காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு Influenza A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருவோருக்கு சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பலர் தொடர்ந்து உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதை கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த பீதிக்கு காரணம் உலகம் முழுவதும் உள்ள மக்களை கொரோனா வைரஸ் தாக்கியதே என கருதப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண Influenza A காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு Influenza A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது எனவும் ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் எனவும் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் செந்தில் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வைரஸ் காய்ச்சல் எந்தெந்த மாவட்டங்களில் அதிகரித்துள்ளது,அதன் தாக்கம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறை எடுக்கிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பரவி வருவது Influenza A வகை தொற்று என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு எதுவும் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 38 மாவட்டங்களில் 10 முதல் 20 மாதிரிகளை எடுக்கத் திட்டம். மொத்தமாக 450-க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளனர்.