சென்னை, வேலூர் உள்ளிட்ட மண்டலங்களில் மின்கம்பங்கள் கொள்முதலுக்கு ரூ.23.18 கோடி ஒதுக்கீடு: அதிகாரிகள் தகவல்
வேலூர்: சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட மண்டலங்களில் 47,800 மின்கம்பங்கள் கொள்முதல் செய்ய ரூ.23.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மழை, வெயில் காற்று காரணமாக கான்கிரீட் மின் கம்பங்கள் அதிகளவு சேதமாகி வருகிறது. மாநில அளவில் 2 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகளும், பல லட்சம் மின் கம்பங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. சிலர் மின் கம்பங்களை சேதமாக்கி வருவதாகவும் புகார்கள் பெறப்பட்டிருக்கிறது.
மின் கம்பங்களின் மீது பல்வேறு எடை அதிகமான பொருட்களை சாய்த்து வைப்பது, பந்தல் போட பயன்படுத்துவது, கம்பங்களின் கீழ் குப்பைகளை கொட்டுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். வாகனங்கள் மோதியும் சில மின்கம்பங்கள் சேதமாகி விட்டது. பழுதான மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்களை வாங்க டெண்டர் விட்டு பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மண்டல அளவில் மின் வாரியத்தின் பணிமனை மூலமாக மின் கம்பங்களை தயாரிக்கும் பணிகள் நடந்தது.
ஆனால் பெரும்பாலான பணிமனைகள் மூடப்பட்டதால், மின் கம்பங்கள் உற்பத்தி நடப்பதில்லை. வெளிமாநிலங்களில் இருந்து தான் பெரும்பாலான மின் கம்பங்கள் பெறப்படுகிறது. மாநில அளவில் நடப்பாண்டில் சுமார் 1 லட்சம் மின்கம்பங்கள் பழுதாகி மாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அவசர அவசியம் கருதி மின்கம்பங்களை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் 180 நாட்களுக்குள் மின்கம்பங்கள் கொள்முதல் செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மண்டலத்திற்கு 10 ஆயிரம் மின்கம்பங்கள், சென்னை மண்டலத்திற்கு 3 ஆயிரம் மின்கம்பங்கள், சேலத்திற்கு 3 ஆயிரம் மின்கம்பங்கள், கோவை மண்டலத்திற்கு 14 ஆயிரம் மின்கம்பங்கள், காஞ்சிபுரம் மண்டலத்திற்கு 5 ஆயிரம் மின்கம்பங்கள் உட்பட மொத்தம் 47 ஆயிரத்து 800 மின்கம்பங்கள் விரைவில் பெறப்பட உள்ளது. இதற்காக ரூ.23.18 கோடி செலவில் மின்கம்பங்கள் டெண்டர் முறையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. புதிய மின்கம்பங்கள் பெறப்பட்டதும், பழைய மின்கம்பங்கள் அகற்றப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்னர்.